வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (25/08/2017)

கடைசி தொடர்பு:14:52 (26/08/2017)

'தினகரனையும் பழனிசாமியையும் இணைக்க முயல்கிறேன்!'- அ.தி.மு.க எம்.எல்.ஏ பேட்டி

நேற்று, சென்னை அடையாறில் தினகரனைச் சந்தித்து அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரத்தினசபாபதி, 'முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் உள்ள கருத்து முரண்பாடுகளைக் கலைய முயன்று வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

ரத்தினசபாபதி

செய்தியாளர்கள் மத்தியில் ரத்தினசபாபதி, 'கட்சியில் ஏற்பட்டிருக்கிற குழப்பத்தைத் தீர்க்க சென்னைக்கு வந்து தினகரனை சந்தித்து அவருடைய கருத்துகளைக் கேட்டறிந்தேன். அதேபோல எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவருடைய கருத்துகளையும் கேட்டேன். பிரிந்திருப்பவர்களை ஒன்றிணைக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் இருவரையும் சந்தித்தேன். இந்த ஆட்சியின்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு இந்த ஆட்சியில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினகரனையும் சசிகலாவையும் ஏன் புறக்கணிக்க வேண்டும், அவர்களை ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்? நான் எடுத்த இந்த முடிவுக்கு 40 முதல் 50 சட்டமன்ற உறுப்பினர்கள் போனில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்தனர். கட்சி யார் பின்னால் இருக்கிறது என்பதற்கு மேலூர் பொதுக்கூட்டமே சாட்சி. ஓ.பன்னீர்செல்வத்தையே சேர்த்துக்கொண்டு இயங்கும் அ.தி.மு.க, தினகரனையும் சேர்த்துக் கொண்டு ஒற்றுமையாக இயங்க வேண்டும். கொறடா, இங்குள்ள 19 எம்.எல்.ஏ-க்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது' என்று தெரிவித்துள்ளார்.