Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விநாயகர் சதுர்த்தியில் விவசாயம் விதைக்கும் தனியார் பள்ளி!

'விநாயகர் சதுர்த்தி' வந்தாலே அனைவருக்கும் கொண்டாட்டம்தான். விதவிதமான பலகாரங்கள், விநாயகர் சிலைகள் என்று இந்தியாவே களைகட்டும். பள்ளிகள், கடைவீதிகள், மார்க்கெட்டுகள் என்று அனைத்து இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். கிரிக்கெட் விநாயகர், நீச்சல் விநாயகர், கம்ப்யூட்டர் விநாயகர் என்று பல விதமான கணபதியின் சிலைகள் கண்ணைக் கவரும். 

கண்ணைக் கவரும் வகையில் மட்டுமல்லாமல் நம் அறிவைக் கண்ணைத் திறக்கும் வகையில் ஒரு விநாயகர் ஓவியத்தை வரைந்துள்ளார்கள்  வேலம்மாள் பள்ளி ஓவியப் பிரிவு மாணவர்கள்.

விநாயகர் வரைபடம்

மழை நீரைச் சேகரிப்போம் (Save rain water) என்ற வாசகத்துடன், ஒரே ஷீட்டில்  2 லட்சம் பிள்ளையார் ஓவியங்களை மிகச் சிறப்பாக வரைந்துள்ளனர். இன்று காலை வேலம்மாள் பள்ளியில் இந்த ஓவியத்திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் காட்டூன் நிபுணர் ராம்கி, மற்றும் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மகேஸ்வரி மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். பல்வேறு சிறுவர் சிறுமியர்கள் விநாயகர் வேடமணிந்து நடனம் மற்றும் பாடல் பாடி அசத்தினர். பின்னர் கணபதிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

இந்த விழா பற்றி பள்ளியின் முதல்வர் ஷ்யாமளா சுப்புவிடம் கேட்டோம் " விநாயகர் சதுர்த்தி ஓர் அற்புதமான விழா. பெரும்பாலும் அனைவரும்  கெமிக்கல்களால் ஆன விநாயகர் சிலைகளைத்தான் வழிபடுகின்றனர். ஒரு மாற்றத்துக்காக நம் பள்ளி ஓவிய மாணவர்களை வைத்தும் கணபதியின் உருவத்தை ஓவியமாக வரையலாம் என்று முடிவெடுத்தோம். அதன் அடிப்படையில் 300 மாணவர்களைக் கொண்டு கைகளாலே வரைப்பட்ட ஓவியம் இது. 

இந்த ஓவியத்தின் முக்கிய  குறிக்கோளே 'மழை நீர் சேகரிப்பை' வலியுறுத்துவதுதான். இந்த ஓவியத்தில் உள்ள ஒவ்வொரு மழைத்துளியிலும் ஒரு கணபதி இருக்கிறார். இதன் நோக்கம் என்னவென்றால் நாம் ஒவ்வொரு மழைத்துளியையும் கடவுளைப் போற்றுவதைப் போல் போற்ற வேண்டும். ஒவ்வொரு மழைத்துளியையும் வீணாகாமல் சேகரிக்க வேண்டும். அதேபோல் ஓவியத்தின் கீழ் பகுதியில் நாம் அனைவருக்கும் உணவு தரும் கடவுளான விவசாயிகளைக் குறிக்கும் விதத்தில் பிள்ளையார் சிலைகளை வரைந்துள்ளோம்" என்றார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

ஓவியம் பற்றி ஓவிய ஆசிரியர் சக்திவேலிடம் பேசினோம் " விநாயகர் சதுர்த்தியை  வழக்கமாக கொண்டாடுவது போல் அல்லாமல் வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தோம். இதில் ஒட்டுமொத்தமாக 2 லட்சம் கணேசா ஓவியங்கள் உள்ளன. முதலில் சிறிய கணேசா ஓவியங்கள் வரைந்தோம். பின்னர் ஒவ்வொரு கணேசா ஓவியத்துக்குள்ளும் 170  சிறிய ஓவியங்களை வரைந்தோம். கருப்பு நிற பேனாவில் ஓவியங்கள் வரைந்து, அதன் மீது ஆயில் பெயிண்டால் கலர் செய்தோம். பெரிய கணபதி ஓவியத்தில் மட்டும் பெயின்ட் செய்துள்ளோம். விநாயகர் அணிந்துள்ள ஆபரணங்களில் கூட சிறிய  விநாயகர் உருவத்தை வரைந்துள்ளோம். ஓவியத்தின் கீழ்ப்பகுதியில்  ஏர், கலப்பை பிடித்துள்ள விநாயகர் சிலைகளை வரைந்துள்ளோம். இதன்மூலம் தண்ணீரையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதே நம் நோக்கம் " என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement