Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறார் வன்கொடுமைக்கு எதிராக ஒரு பைக் டூர்... அசத்தும் மூன்று இளைஞர்கள்!

நமக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றுதான் பலரும் பயணிக்கிறார்கள். நமக்குள் மட்டுமல்ல, இந்த சமூகத்துக்கும் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் வகையில் நம் பயணம் அமைந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு மாற்றத்தைச் சமுதாயத்தில் சிறிதளவாவது ஏற்படுத்த வேண்டுமென்ற பெரிய ஆசையில் காஷ்மீர்  முதல்  கன்னியாகுமரி வரை இருசக்கர வாகனத்தில் கிட்டத்தட்ட 6,000 கி.மீ பயணித்திருக்கிறார்கள் கோவையைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள்.

பயணம்

சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை, தூய்மை இந்தியா போன்ற கோஷங்களை முன் வைத்து ஸ்ரீநகரில் தொடங்கி குமரி வரை இரு சக்கர வாகனத்தில் கொடிகளை ஏந்தி துண்டுப் பிரசுரம் கொடுத்து பரப்புரை செய்துவந்தவர்கள், சமீபத்தில் கரூர் ஆட்சியர் அலுவலகம் வந்தனர். “விளம்பரத்துக்காகத்தான் இந்தப் பயணமா?'' என்று தண்டபாணி லோகநாதன், சதீஷ்குமார், நரேஷ்மாதேஷ் ஆகியோரிடம் பேசினோம். 

சிரித்துக்கொண்டே நம்மிடம் உற்சாகமாக பேசிய தண்டபாணி, ''நான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். பொதுவாக செய்திகள் பார்க்கும்போது நிறைய சிறார்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும் அதன் காரணமாக உயிரிழப்பதும் பெருகிவருவதைக் காணமுடிந்தது. குழந்தைகளைத் தெய்வமாக பார்க்கும் நம் நாட்டின் சாபக்கேடாக இதுபோன்ற நிகழ்வுகளை உணர்ந்தேன். அந்தச் செய்திகள் எனக்குள் பெரும் நெருடலை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக நாம் நமக்கு பிடித்த சைக்கிள் பயணம் மூலமாக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். அதை நண்பர்களிடம் சொன்னபோது மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். என்னோடு பயணத்திலும் இணைந்தனர்.  

நெடுந்தூரம் சைக்கிளில் பயணம் போவது எங்களுக்கு வழக்கம்தான். அந்தப் பயணத்தைச் சற்று பெரிதாக செய்ய முடிவெடுத்தபோதுதான் "Mission k to k" (மிஷன் கே டூ கே) உருவானது. அதை சைக்கிளில் செய்ய ஆசைப்பட்டோம். ஆனால் பயண தூரம், பாதை, தட்பவெட்பம் எதுவும் கணிக்கும்படியாக இல்லை, ஆகையால் இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடிவெடுத்தோம்.'' என்று பயணத்தின் ஆரம்ப நிலையை  விளக்கினார்.  

அவரைத் தொடர்ந்து  சதீஷ்,  “ஆகஸ்ட் 14 அன்று  ஸ்ரீநகரில் பார்சல் மூலமாக அனுப்பிய வண்டி எங்களிடம் கிடைத்து. ஆகஸ்ட் 15 அன்று அங்கிருந்து  கன்னியாகுமரியை நோக்கிய பயணத்தைத் தொடங்கினோம். காஷ்மீரில் அன்று கலவரம் காரணமாக பந்த் என்பதாலும் பதான்கோட்டில் தமிழகத்தைச்சேர்ந்த ராணுவ வீரர் சுட்டு கொல்லப்பட்டதாலும் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதற்றமான சூழல் நிலவியது. அங்கிருந்த அதிகாரிகள் எங்களை நன்கு விசாரித்துவிட்டு, எங்கள் வண்டியில் இருந்த தேசியக் கொடியை கழட்டுமாறு வலியுறுத்தினார். கீழே செல்லும் வரை கொடியை மாட்ட வேண்டாம் என்று எச்சரித்ததோடு எங்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்துகள் சொல்லி அனுப்பிவைத்தனர். இருந்தும் காஷ்மீர் தாண்டும்வரை பலபேருக்கு பதில் சொல்லவேண்டியிருந்தது. டென்ஷன் மிகுந்த இடத்தைத் தாண்டும்வரை ஒருவித பதற்றநிலைதான். பயணத்தின் ஆரம்பமே திக் திக் என்றிருந்தது.” என்றார்.

பிரசாரம் செய்த இடங்களில் பிரச்னை ஏற்பட்டதா என்று நரேஷிடம் கேட்டோம், “நாங்கள் ஸ்ரீநகர் - டெல்லி - ஆக்ரா - ராஜஸ்தான் - உத்தரப் பிரசதேசம் என பயணத்தை அமைத்துக்கொண்டோம். எங்கள் நோக்கத்தை எடுத்துச் சொல்வதில் தென் மாநிலங்களை விட வடமாநிலங்களில் சவால் இருந்தது. முதலில் எங்களை விசித்திரமாக பார்த்தார்கள். படித்தவர்கள் சிலரின் உதவியோடு மக்களிடம் சென்றோம். அந்தத் தருணத்தில் படிப்பின் முக்கியத்துவம் உணர்தோம். சில இடங்களில் எங்களின் நோக்கத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பயணம்

நாளொன்றுக்கு 700 கி.மீ பயணம். அதிலும் ஆந்திராவைக் கடக்கும்போது இடைவிடாது மழை, இன்ஜின் ஆயில் மாற்றும் நிலை வந்தும், ஆயில் கடைகள் இல்லாத நிலை, பழக்கம் இல்லாத உணவுமுறை, சிலநேரங்களில் இரண்டுநாள் சாப்பிடாமல் பயணம் என்று மொழி தாண்டிய சவால்கள் அனைத்தையும் கடக்க எங்கள் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடுமே உதவியது. பயணத்தின்போது தூக்கம் வந்தால் எங்கள் நண்பர்களுக்கு போன் செய்து பேசுவோம், அதோடு தூக்கம் போய்விடும்.'' என்றவர்களிடம், ''அலுவலகத்தில் எப்படி விடுப்பு கிடைத்து, பயண செலவுக்கு என்ன பாஸ் பண்ணீங்க?” என்றோம்.

“எங்கள் பயணத் திட்டத்தைக் கேட்டதும் மேலாளர் மகிழ்ச்சி அடைத்தார். அதோடு, விடுமுறைக்கு அனுமதி கொடுத்தார். இந்த பெரும் முயற்சிக்கு நாங்கள் மூன்று பேர் மட்டும் காரணம் இல்லை. எங்களுக்குப் பின்னால் ஏழு பேர் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு பொருள் உதவி மட்டும் அல்ல மாரல் சப்போர்ட்டும் அவர்கள்தான். பல மாநிலங்களில் உள்ள அவர்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு எங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தனர். இங்கு இப்போது கரூரில் கூட  பைக் இன்ஜின் ஆயில் மாற்ற  ரோட்டரி கிளப் முன்னாள் பிரசிடெண்ட் மணிமாறன் உதவினார். மோகன்பாபு மற்றும் ரஞ்சித் ஆகியோர் சாப்பாடு, தங்குமிடம் கொடுத்து நெகிழ வைத்தனர். இதற்கு முன் அவர்கள் யாரென்றே தெரியாது. எங்கள் பயணம் இப்படிப்பட்ட புதிய நண்பர்களைத் தேடித்தந்துள்ளது. கன்னியாகுமரியை நெருங்கப்போகிறோம், இது நல்லவிதமாக அமைந்ததற்கு எங்கள் பெற்றோர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்படி எங்களுக்கு உதவிய பல மனங்களின் உந்து சக்தியால் இந்தப் பயணம் தொடர்கிறது’ என விடைபெற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement