பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆலயத்தில் சதுர்த்தி விழா கோலாகலம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பகவிநாயகா் ஆலயத்தில் விநாயகா் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகா் பெருமானை வழிபட்டனா்.

பிள்ளையார்பட்டியில் விநாயகா் சதூர்த்தி விழா ஆண்டுதோறும் பத்து நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டு இவ்விழாவை முன்னிட்டு கடந்த 16 -ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 10-ம் நாள் நிகழ்சியான இன்று, விநாயகா் சதுர்த்தியை முன்னிட்டு காலை 4.00 மணிக்கு, நடைதிறக்கப்பட்டு மூலவா் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 10 மணியளவில் தீர்த்தவாரி உற்சவம், கோயில் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் நடைபெற்றது. முன்னதாக விநாயகப் பெருமான் திருக்குளத்தின் முன்பு பல்லக்கில் பார்வையிட, அங்குச தேவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, குளத்தில் நீரடினார். அதைத் தொடர்ந்து தீபாராதனைகள் காட்டப்பட்டது. பின்னா் விநாயகப் பெருமான் நான்கு மாட வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தார்.

இந்நிகழ்ச்சியைக் காண தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து, பக்தியுடன் விநாயகப் பெருமானை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டுச் சென்றனா். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 400-க்கும் மேற்பட்ட போலீஸாரும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.

பிற்பகலில் அரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றால் செய்யப்பட்ட 27 கிலோ எடையுள்ள முக்கூரனி கொழுக்கட்டை கற்பக விநாயகருக்கு படைக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!