Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆதிச்சநல்லூர், கீழடி ஆய்வுகளை தொடர வேண்டும்..!'- வீரமணி தலைமையில் நடந்த மாநாட்டில் தீர்மானம்

''திராவிட நாகரிகத்தை பறைசாற்றும் ஆதிச்சநல்லூர் கேட்பாரற்றுக்  கிடக்கிறது. கீழடியும் கைவிடப்பட்டுப் போன நிலைதான். எனவே, உடனடியாக மத்திய அரசு இந்த ஆய்வுகளை திறந்த மனதுடன் தொடரப்பட ஆவன செய்ய வேண்டும்'' என்று கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற சென்னை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை பெரியார் திடல்  எம்.ஆர். ராதா மன்றத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில்  மாநில அதிகார மீட்பு, இந்தி-சமஸ்கிருத கண்டன மாநாடு நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
''இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழியாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழே இருக்க வேண்டும் என்றும், அவசியப்படும் சமயத்தில் மட்டும் ஆங்கிலம் இடம்பெறலாம் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் நதிநீர் பிரச்னையில் தமிழ்நாட்டுக்குரிய உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

கர்நாடக எல்லையில் மேகதாது அணையைக் கட்டுவதற்கு நீண்டகாலமாக கர்நாடக அரசு திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை அம்மாநிலம் ஈடுபட்டபோதெல்லாம் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வந்துள்ளது. இந்த நிலையில் மேகதாது அணையை கட்டிக்கொள்ள தமிழ்நாடு அரசு இசைவு தந்துள்ளது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மன்னிக்கப்படவே முடியாத மாபெரும் துரோகம். உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் வாயிலாக தெரிவிக்கப்பட்ட ஒப்புதலை வாபஸ் பெற வேண்டும்.
முல்லைப்பெரியாறு, பாலாறு, ஒக்கேனக்கல் போன்ற தமிழ்நாட்டுக்குரிய நீர் பிரச்னைகளுக்கு - உத்தரவாதம் அளிக்கும் வகையில், நிரந்தரத் தீர்வு சட்ட ரீதியாக எட்டப்பட வேண்டும். தமிழ்நாட்டு உரிமைக்கு ஊறுவிளையும் காலகட்டத்தில், ஜனநாயக உரிமையைப் பின்பற்றி அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த முடிவை மேற்கொள்ள வேண்டும்.

கீழடி  

ஆதிச்சநல்லூர்,  கீழடி போன்ற இடங்களில் கிடைக்கக்கூடிய தடயங்கள் ஆரிய நாகரிகத்துக்கு முந்தைய திராவிட நாகரிகங்களுக்கு உரியவை என்ற காரணத்தால், அதை இருட்டடிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு, மத்திய அரசு செயல்படுவதை இம்மாநாடு கண்டிக்கிறது. மொகஞ்சதாரோ ஆய்வை நடத்திய பேராசிரியர் ஆர்.டி.பானர்ஜி ‘மாடர்ன் ரிவ்யூ’ இதழில், ' சிந்து வெளியிலும் பலுச்சிஸ்தானிலும் நடைபெற்ற கண்டுபிடிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரிலிருந்த அறுந்து போகாத ஒரு சங்கிலி, தொடர்போல் திராவிடர்களின் பண்பாட்டு தொடர்பு உள்ளது' என்றார். அத்தகு ஆதிச்சநல்லூர் கேட்பாரற்றுக்  கிடக்கிறது. கீழடியும் கைவிடப்பட்டுப் போன நிலைதான். கீழடியில் ஆர்வத்துடன் பணியாற்றிய கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டார். உடனடியாக மத்திய அரசு இந்த ஆய்வுகள் திறந்தமனதுடன் தொடரப்பட ஆவன செய்யவேண்டும்.

ஆதிச்சநல்லூர்

சென்னையில் இயங்கிவரும் தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் தனித்தன்மையைச் சிதைக்கும் வகையில், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மத்திய பி.ஜே.பி அரசின் போக்குக்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், செழுமைப்படுத்தி, தனித்தன்மையுடன் இந்நிறுவனம் இயங்க ஆவன செய்யும்படி மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.  தமிழக மீனவர்கள் பரம்பரை பரம்பரையாக மீன்பிடித்து வந்த பகுதி கச்சத்தீவுப் பகுதியாகும். இந்நிலையில், அப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும் அன்றாட தகவலாக இருப்பதால், அப்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமையை உடனடியாக மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். 

புதியக் கல்விக் கொள்கை என்பது இந்துத்துவாவையும், குலக்கல்வியையும் உள்ளடக்கமாகக் கொண்டது. பல்வேறு இனங்கள், கலாசாரங்கள் கொண்ட துணைக் கண்டம் என்பதை மறந்து  புதிய கல்வித் திட்டம் ஒன்றைத் திணிக்க முயலுவது ஆபத்தானதாகும். எதிலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற இந்துத்துவா கோட்பாட்டைத் திணிக்கும் இத்தகைய முயற்சியைக் கைவிட வேண்டும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவர வேண்டும். தொழிற்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகளை மாநில அரசுகளின் பொறுப்பிலேயே விட வேண்டும். மாநில அரசுகளும் இந்த வகையில் கவனம் செலுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்'' என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement