Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டமன்றத்தில் இன்னொரு பூகம்பம்... ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வைக்கும் செக்!

தினகரன்

டி.டி.வி. தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழக கவர்னர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். அதே நாளில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக கூறி, சட்டப்பேரவையைக் கூட்டி உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கடிதம் மூலம் ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால், கவர்னரோ எந்த முடிவையும் எடுக்காமல் மும்பைக்குக் கிளம்பிப்போனார். இந்நிலையில் இன்று (ஆகஸ்டு 26) திடீரென கவர்னர் மீண்டும் சென்னை திரும்புகிறார். 'தி.மு.க. விடுத்த கோரிக்கை குறித்து முக்கிய முடிவை அவர் எடுக்கப்போகிறார்; தமிழக சட்டசபையில் மெஜாரிட்டியை நிருபிக்க எடப்பாடி அரசுக்கு உத்தரவிடுவார்" என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு ஒரு 'செக்' வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி. 

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பாக்கு பொட்டலங்கள் பொதுஇடங்களில் தாராளமாக கிடைக்கின்றன. நடவடிக்கை எடுக்காமல் அரசு இருக்கிறது" என்று தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் 19.7.17 அன்று ஒரு பிரச்னையைக் கிளப்பினர். திடீரென குட்கா, பாக்கு பொட்டலங்களை அவையில் எடுத்துக் காட்டினர். தி.மு.க. உறுப்பினர்களின் இந்தச் செயலைக் கண்டித்த சபாநாயகர் ப.தனபால், சில தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும்படி, இந்தப் பிரச்னையை அவை உரிமைக்குழுவுக்கு பரிந்துரை செய்தார். அதன்மீது இத்தனை நாளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டிருந்தனர். இப்போது அரசியல் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளதால், குட்கா விவகாரம் தொடர்பாக வருகிற 28-ம் தேதி திங்கள் கிழமை அன்று அவை உரிமைக்குழு கூடி விவாதிக்கும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியிருக்கிறார்.

குட்கா பொட்டலங்களை சட்டசபையில் காட்டியதாக 20 தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் வீடியோ, போட்டோ ஆதாரங்களை அவை உரிமை மீறல் குழு சேகரித்துள்ளது. "இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆறு மாதங்கள் வரை 'சஸ்பெண்டு' செய்யப்படலாம்" என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் எடப்பாடி அரசின் மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடந்தால், அது தோற்றுப்போகும். இதனை கணக்குப்போட்டே, மு.க.ஸ்டாலினுக்கு செக் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அவர்கள். "குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், சட்டப்படி சந்திப்போம்" என்று மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். 

எடப்பாடி பழனிசாமி

முதலில் மன்னிப்பு வழங்கிய எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த பிப்ரவரி மாதம் பதவி ஏற்றது. அவர் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் வித்யாசாகர்ராவ் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தமிழக சட்டசபை கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி கூடியது. அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவை மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி தலைவர்களும் பேசினார்கள். அப்போது சட்டசபையில் கடும் ரகளை ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் தனபாலின் இருக்கையை சூழ்ந்துகொண்டு கோஷமிட்டனர். சபாநாயகரின் 'மைக்' உடைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏழு தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவை உரிமைக்குழுவுக்கு சபாநாயகர் பரிந்துரை செய்தார். அந்தக் குழுவின் தலைவரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், ஏழு தி.மு.க. எம்.எல்.ஏ-க்களையும் ஆறு மாதம் சஸ்பெண்டு செய்ய சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதற்கிடையில், தி.மு.க. தலைவர்களும், சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களும் சபாநாயகரை சந்தித்துப் பேசினார்கள். எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மன்னிப்புக் கடிதம் தரப்பட்டது. அதை ஏற்று, அந்த எம்.எல்.ஏ-க்கள் மீதான நடவடிக்கையை கைவிட்டார் சபாநாயகர். 

இப்போது ஏன் இந்த செக்?

தற்போது... அ.தி.மு.க. எடப்பாடி கோஷ்டி, தினகரன் கோஷ்டி என்று பிரிந்து கிடக்கிறது. எடப்பாடி கோஷ்டியில் 114 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். 21 எம்.எல்.ஏ-க்கள் தினகரன் கோஷ்டியில் இருக்கிறார்கள். எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மேலும் சில எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் 20 பேர் சஸ்பெண்ட் செய்யப்படும் பட்சத்தில், அவையில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 213 ஆகக் குறையும். அப்போது வாக்கெடுப்பு நடத்தினால், எடப்பாடி அரசுக்கு தேவை 108 எம்.எல்.ஏ-க்கள்தான். எனவே, தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பது உறுதி என தெரிகிறது.

தினகரன்

பொள்ளாச்சி ஜெயராமன் என்ன கூறுகிறார்?

"அரசால் தடைசெயயப்பட்ட போதை வஸ்துவை வைத்திருந்தாலோ, விற்றாலோ குற்றம். இந்தத் தடை உத்தரவு சட்டமன்றத்தில்தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை வைத்துப்பார்க்கும்போது, போதை வஸ்துக்களை அவையில் கொண்டுவந்து காட்டியதன் மூலம் தி.மு.க. உறுப்பினர்கள், அவர்கள் கடமையில் இருந்து தவறி விட்டனர். போதை வஸ்துக்களை காட்டியதற்கான குளோசப் போட்டோ, வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் வைத்து, அவை உரிமைக்குழு கூடி விவாதிக்க உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தவறு செய்திருந்தால், கடுமையான நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கமுடியாது" என்றார் பொள்ளாச்சி ஜெயராமன்.

பிரச்னையில் சிக்கியுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான சேகர்பாபு சொல்வது இதுதான்!

சேகர் பாபுதமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, போதை வஸ்துகள் பொது இடங்களில் தாராளமாக விற்கப்படுகின்றன. இளைஞர்கள், மாணவர்கள் அவற்றை வாங்கி உபயோகித்து சீரழிகிறார்கள். இதை அரசின் கவனத்துக்கு கொண்டுபோய், சட்டவிரோத விற்பனையை தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற பொறுப்பு எதிர்க்கட்சியான எங்களுக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில்தான், அன்றைக்கு நாங்கள் சட்டசபையில் செயல்பட்டோம். 'குட்கா போதை வஸ்துகள் எங்கெங்கே விற்பனை செய்யப்படுகின்றன?' என்பதையெல்லாம் நேரில் போய் புகைப்படம் எடுத்தோம். எங்கள் தலைவர்கள் சட்டசபை கூடுவதற்கு முன்பு, சபாநாயகரை அவரது அறையில் சந்தித்து அந்த போட்டோக்களை காட்டி, விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள். சட்டசபையில் முதலில் புகைப்படங்களைத்தான் காட்டினோம். பிறகுதான், போதை வஸ்துக்களை காட்டினோம். இது ஒன்றும் வெடிமருந்தோ, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளோ கிடையாது. அல்லது யாரையாவது காயப்படுத்தக்கூடிய பொருளும் இல்லையே?

நாங்கள் சட்டசபையில் போதை வஸ்துக்களை காட்டியபிறகு, பொது இடங்களில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட குட்கா, போதை வஸ்துக்களை டன் கணக்கில் கைப்பற்றியிருக்கிறார்கள். அவற்றின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும். அப்படியானால், நாங்கள் சட்டசபையில் காட்டியது நிஜத்தில் நடைமுறையில் இருந்ததுதான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளலாம். இதையெல்லாம் மீறி, அரசியல் காரணங்களுக்காக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், எங்கள் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறியதுபோல், அதனைச் சட்டப்படி சந்திப்போம்" என்றார்.

அவை உரிமைக்குழுவில் உள்ள தினகரன் எம்.எல்.ஏ-க்களின் நிலைப்பாடு என்ன?

"அவை உரிமைக்குழுவில் மொத்தம் 17 பேர் இருக்கிறார்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் ஒன்பது பேரும், குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனையும் சேர்த்தால் 10 பேர் இருக்கிறார்கள். இவர்களின் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தற்போது தினகரன் கோஷ்டியில் இருக்கிறார்கள். தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஆறு பேர். காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர். குட்கா விவகாரத்தில் எடப்பாடி அரசு,  தி.மு.க உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டால், தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் இருவர் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார்கள் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. ஒருவேளை, இவர்கள் எடப்பாடி அரசின் முடிவுக்கு ஆதரவாக இல்லாமல் போனால், எடப்பாடி ஆதரவு உறுப்பினர்கள் எண்ணிக்கை எட்டு ஆகிவிடும். தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 9 ஆகிவிடும். இதுமாதிரியான சூழ்நிலை வரும்போது, உரிமைக்குழு தலைவர் எடுக்கும் முடிவுதான் இறுதியானதாக இருக்கும்" என்று சட்ட நிபுணர்கள் கருத்துச் சொல்கிறார்கள். மேலும், "குழுவில் உள்ளவர்கள் கருத்து வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், இறுதி முடிவைப் பொறுத்தவரை குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கையில்தான் இருக்கிறது" என்கிறார்கள். அதன்படி பார்த்தால், தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்பதுதான் இன்றைய நிலவரம். 

ஆக, சட்டமன்றத்தில் இன்னொரு பூகம்பம் நடக்கப்போகிறது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement