வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (26/08/2017)

கடைசி தொடர்பு:16:20 (09/07/2018)

பிரித்திகா யாசினியைப் பின்தொடர்ந்த நஸ்ரியா! - காவலர் பணியில் இரண்டாவது திருநங்கை

பரமக்குடியைச் சேர்ந்த  திருநங்கை நஸ்ரியா இரண்டாம் நிலை காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பரமக்குடியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் உடலில் ஏற்பட்ட மாறுதலை அடுத்து 2013-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். திருநங்கையாக மாறிய அவர் தனது பெயரையும் நஸ்ரியா என மாற்றிக்கொண்டார். +2 வரை படித்துள்ள நஸ்ரியா அஞ்சல் வழியாக இளங்கலை ஆங்கில பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

திருநங்கை நஸ்ரியா

இந்நிலையில், தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார் நஸ்ரியா. தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நஸ்ரியா கடந்த மாதம் 31-ம் தேதி ராமநாதபுரத்தில் நடந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்கச் சென்றார். ஆனால், திருநங்கைக்கான சான்றிதழ் இல்லை எனக் கூறி அவரை உடல் தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம்  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருந்த நஸ்ரியா திருநங்கைக்கான சான்றிதழை வழங்காமல் சமூக நலத்துறையினர் கடந்த 3 ஆண்டுகளாக தாமதம் செய்வதாகவும், இன்று தனக்கு சான்றிதழ் வழங்காவிட்டால் தீ குளித்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சமூக நலத்துறையினர் அன்று மாலை நஸ்ரியாவுக்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் மூலம் திருநங்கைக்கான அடையாள அட்டையை வழங்கினர்.

திருநங்கைக்கான அடையாள அட்டையுடன் நஸ்ரியா நீதிமன்றத்தில் ஆஜர் ஆனதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி அவரை உடல் தகுதித் தேர்வுக்கு அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அன்று மாலையிலும், இன்று காலையிலும் நடந்த உடல் தகுதித் தேர்வுகளில் நஸ்ரியா பங்கேற்று தேர்ச்சி அடைந்தார். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பிலும் பங்கேற்றார். அனைத்து தேர்வுகளிலும் திருநங்கை நஸ்ரியா தேர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து அவர் இன்று காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நஸ்ரியா, காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தப் பணி கிடைக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.