வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (26/08/2017)

கடைசி தொடர்பு:16:44 (26/08/2017)

இளைஞர்களின் தொழில்திறனை வளர்க்க மாநில அளவிலான திறனாய்வுப் போட்டி!


 

இளைஞர்களின் தொழில் திறன்களையும்,திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் மாநில அளவிலான திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுபற்றி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களையும், திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் மாநில அளவில் திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்படும் என 2016-2017 பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இப்போட்டிகளை நடத்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணை எண் 31, நாள் 08.03.2017 ன் மூலம் அரசாணை வெளியிடப்பட்டது. நமது மாநிலத்தில் உள்ள மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டவும், புதிய தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த எண்ணங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஒரு களத்தினை ஏற்படுத்தவும், தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தின் மூலம் மாநில அளவிலான திறனாய்வுப் போட்டிகள் செப்டம்பர் மாதம் 3-வது வாரத்தில் நடத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக மாவட்ட அளவில் திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் படைப்பு மாநில அளவில் கலந்துகொள்வதற்கு மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்படும். இதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் 08.09.2017 அன்று திறனாய்வுப் போட்டிகள் எம்.குமரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய மூன்று துறைகளில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்போர் கீழ்க்காணும் வகையில் பங்கேற்கலாம்.
 

1) பொறியியல் கல்லூரிகள்/பல்தொழில்நுட்ப கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள்/கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்/தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழில் பழகுநர்களாக பயிற்சி பெறுவோர்.

 2) தொழிற்சாலைகளில் பணிபுரிவோர்.

 3) குறுகிய கால பயிற்சிகள் மூலம் திறன் பெறுவோர் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் பணி அனுபவம் பெற்ற திறனுடையோர்.

இப்போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பெறுவோர்க்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும், இவர்கள் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநில அளவிலான திறனாய்வுப் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள் ஆவர். இப்போட்டிகளைப் பார்வையிட தமிழகத்திலுள்ள பெரிய தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வருகை தர உள்ளனர். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள்/தொழிற்சாலை பணியாளர்கள்/தொழில் பழகுநர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இப்போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளையும், திறனையும் வெளிப்படுத்துவதன் மூலம் நல்ல வேலைவாய்ப்பினை பெறலாம் என்பதால், இப்போட்டிகளில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.