வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (26/08/2017)

கடைசி தொடர்பு:17:40 (26/08/2017)

’அ.தி.மு.க-வில் நிலவும் குழப்பங்கள் விரைவில் நீங்கும்’ - விஜிலா சத்யானந்த் எம்.பி நம்பிக்கை

அ.தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் விரைவில் தீர்ந்து சுமுக நிலைமை எட்டப்படும் என விஜிலா சத்யானந்த் எம்.பி நம்பிக்கை தெரிவித்தார்.

அ.தி.மு.க-வில் எடப்பாடி, டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் அளித்த மனு தொடர்பாக விரைவில் நடவடிக்கை இருக்கும் என்கிற நம்பிக்கையில் அவர்கள் புதுச்சேரியில் முகாமிட்டு இருக்கிறார்கள்.

விஜிலா சத்யானந்த்

இதனிடையே, கட்சியில் தங்களுக்கு எதிராகப் பேசுபவர்கள், செயல்படுபவர்கள் என பலரையும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் அதிரடியாக நீக்கி வருகிறார். இதில், அமைச்சர்களும் தப்பவில்லை. இந்த நிலையில், நெல்லையில் அமைப்புச் செயலாளராக இருந்த சுதா.பரமசிவன் எடப்பட்டி அணிக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவரை அந்தப் பொறுப்பில் இருந்து டி.டி.வி.தினகரன் அதிரடியாக நீக்கினார். அத்துடன் புதிய அமைப்புச் செயலாளராக கல்லூர் வேலாயுதம் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பாகவே ஆர்.பி.ஆதித்தனும் அமைப்புச் செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.

நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையிலும், மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா, பகுதிச் செயலாளர்களான மேலப்பாளையம் ஹயாத், நெல்லை மோகன், தச்சநல்லூர் மாதவன் ஆகியோரும், தினகரனால் புதிதாக பாளையங்கோட்டை ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்ட அசன் ஜாஃபர் அலியும்  நெல்லை மாநகரம் முழுவதும்  டி.டி.வி.தினகரனுக்கு அதரவாகப் போஸ்டர்களை ஒட்டி, அவரது தலைமைக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளனர். 

விஜிலா

புதிய நிர்வாகிகள் அனைவரும் சென்னையில் இருந்து நெல்லை திரும்பிய நிலையில் இன்று அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். டி.டி.வி.தினகரன் ஆதரளர்களான பாப்புலர் முத்தையா, விஜிலா சத்யானந்த் எம்.பி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர். பின்னர் பேசிய விஜிலா சத்யானந்த், ‘’அ.தி.மு.க-வில் தற்போது ஏற்பட்டு இருப்பது உள்கட்சி பிரச்னை. இது அண்ணன் - தம்பி சண்டையைப் போன்றது. இந்த சிக்கலை எல்லாம் கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலா சரி செய்வார். கட்சிக்குள் நிலவும் பிரச்னைகளை சரிப்படுத்தி கட்சியை வலிமையாக மாற்றும் தகுதி சசிகலாவுக்கு மட்டுமே இருக்கிறது. கட்சியில் ஏற்பட்டு இருக்கும் குழப்பங்கள் அனைத்தும் விரைவில் திர்ந்து விடும். டி.டி.வி.தினகரன் தலைமையை விரும்பி ஏற்று அவருக்கு கீழ் செயல்படுவது என முடிவு செய்தே நாங்கள் எல்லோரும் வந்துள்ளோம். அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம். இந்த ஆட்சி இன்னும் நூறு ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். விரைவில் கட்சியில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க