திருவிழா முனைப்பில் வேளாங்கண்ணி: முன்னேற்பாடுகள் பணி மும்முரம்! | velankanni madha temple festival preparation

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (26/08/2017)

கடைசி தொடர்பு:18:35 (26/08/2017)

திருவிழா முனைப்பில் வேளாங்கண்ணி: முன்னேற்பாடுகள் பணி மும்முரம்!

கீழைநாடுகளின் லூர்து நகரம் என்றழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழா, வருகின்ற 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது.  இவ்விழாவில் பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்கொள்ள நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், சிறப்புப் பேருந்து மற்றும் ரயில் வசதிகள், பக்தர்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன.  

மாநிலம் எங்கும் டெங்குக் காய்ச்சல் வெகுவேகமாக பரவி வருவதால் வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு டெங்கு பரவிடாமல் இருக்க முக்கியத்தும் அளிக்குமாறும், அதற்கான தக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தினார்.  அதன்பேரில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செல்வக்குமார் தலைமையில் வேளாங்கண்ணிப் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.  

வேளாங்கண்ணிக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  இந்த நீரை வேளாங்கண்ணியில் பிரித்து வழங்குவதற்காக 6 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.  அந்தத் தொட்டிகளில் குடிநீருடன் கலக்கப்படும் குளோரின் அளவை ஆய்வுசெய்த சுகாதரத்துறை துணை இயக்குநர் செல்வக்குமார், ''வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு மருத்துவர்கள் அடங்கிய 342 சுகாதாரப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  மேலும், தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் குப்பைகளை அகற்ற 350 தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணிசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.  டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க 30 பேர்கொண்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மேலும், வேளாங்கண்ணி ஆர்ச், மாத்தான்காடு, பரவை சோதனைச்சாவடி உள்ளிட்ட 6 இடங்களில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதைத்தவிர தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் தண்ணீர் தொட்டிகள் தூய்மையாக இருக்கிறதா? என்றும், இவர்கள் சுகாதாரத் தகுதிக்கான சான்று பெற்றுள்ளார்களா? என்றும் ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது.  ஆக, இத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன'' என்றார். 
 


[X] Close

[X] Close