வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (26/08/2017)

கடைசி தொடர்பு:16:34 (26/08/2017)

பா.ஜ.க-வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் !

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பா.ஜ.க-வில் இணைந்தார். 

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் நயினார் நாகேந்திரன் (கோப்புப்படம்)


டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் நயினார் நாகேந்திரன், அந்த கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடன், அ.தி.மு.க-வில் இருந்த வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் ஆகியோரும் பா.ஜ.க-வில் இணைந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த நயினார் நாகேந்திரன், அணிகள் பிரிவுக்குப் பின்னர் எந்தவொரு அணிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார்.

இந்தநிலையில், பா.ஜ.க-வில் அவர் இணைய உள்ளதாக கடந்த சில நாள்களாகவே தகவல்கள் வெளியாகின. ஆகஸ்ட் 22-ல் அமித் ஷா தமிழகம் வர இருந்த நிலையில், அவரது முன்னிலையில் பா.ஜ.க-வில் நயினார் நாகேந்திரன் இணைவார் என்றும் கூறப்பட்டது. கடைசி நேரத்தில் அமித் ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். அவருக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.