வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (26/08/2017)

கடைசி தொடர்பு:19:30 (26/08/2017)

'தண்ணீரில் கரைக்கவேண்டாம், மண்ணில் புதையுங்கள்': விநாயகர் சதுர்த்தியின் புது மெசேஜ்!


    

கடலூர் சாவடியைச் சேர்ந்தவர் ராஜா. விஜய் ரசிகர் மன்றத்தில் ஒன்றியத் தலைவராக இருக்கும் இவர், விநாயகர் சதூர்த்தியில் விதைப் பிள்ளையாரைவிட, அதற்கும் ஒரு படி மேலே போய் மரக்கன்று பிள்ளையாரை வைத்து, வினோத விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி மரம் வளர்ப்பு குறித்து, மக்கள் மத்தியில் ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

ராஜாஇதுகுறித்து ராஜாவிடம் பேசினோம்,  "தமிழகத்தில் இப்போது விநாயகர் சதுர்த்தியை நாம் பெரும்பான்மையான குடும்பங்களில் கொண்டாடி வருகிறோம். வீட்டில் வைத்து படைக்கும் சிறுசிறு பிள்ளையாருக்கு அலங்கார குடை வைத்துப் படைப்பது வழக்கம். பிள்ளையாரை தண்ணீரில் கரைத்த கையோடு அந்த குடையையும் தூக்கி வீசிவிடுவோம். அதனால் என்ன பயன்? அதற்குப் பதிலாக வேம்பு, புங்கை, கொன்றை, பூவரசு என ஏதாவது ஒரு நிழல்தரும் மரக்கன்று வைத்துப் படைக்கலாம். இது குடையைவிடவும் விலை குறைவுதான். மூன்றாவது நாள் அந்தப் பிள்ளையாரை தண்ணீரில் கரைக்காமல் அந்த மரக்கன்றோடு சேர்த்து மண்ணில் புதைத்தால் வீட்டுக்கொரு மரம் நடப்படும். இதனால் நீர் மற்றும் சுற்றுசூழல் மாசுவை கட்டுப்படுத்தலாம். விதைப் பிள்ளையாரைவிட இது சிறப்பானது. தமிழகத்தைவிட வட மாநிலங்களில்தான் இவ்விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அப்படிப் பார்த்தால் ஒரே நாளில் இந்தியாவில் சுமார் 50 கோடி மரக்கன்றுகள் நடப்படும். மரம் வளர்க்க எவ்வளவோ முயற்சிகள் செய்துவரும் நாம், இப்படியும் செய்யலாமே" என்றார்.
      

சபாஷ். சரியான யோசனை...!