நீட் தேர்வுக்கு எதிராக சேலம் திராவிடர் கழகம் போராட்டம் | Dravidar kazhagam protest against Neet exam in Salem

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (26/08/2017)

கடைசி தொடர்பு:20:40 (26/08/2017)

நீட் தேர்வுக்கு எதிராக சேலம் திராவிடர் கழகம் போராட்டம்


சேலம் பழைய பேருந்து நிலையம் தபால் நிலையத்திற்கு முன்பு சேலம் திராவிடர் கழகத்தின் சார்பாக நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஜவகர், தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன், மண்டல தலைவர் சுப்பிரமணியன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் கலந்து கொண்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஜவகர், ''தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து நமக்கு காவிரி நீர் கொடுக்காமல் வஞ்சித்து வரும் நிலையில் கர்நாடக  அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாது அணை கட்டிக் கொள்ள உச்சநீதிமன்றத்தில்  ஒப்புதல் அளித்திருப்பது மன்னிக்க முடியாத வரலாற்று துரோகம்.  


மேகே தாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் கொடுத்திருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியதற்கு சமம். இப்படி ஒரு ஒப்புதலை கொடுப்பதற்கு தமிழக அமைச்சரவையில் முடிவு எடுத்ததா? இல்லை சட்டமன்றத்தைக் கூட்டி அதில் விவாதித்து முடிவு எடுத்ததா? இல்லை அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி கருத்துகளை கேட்ட பின் முடிவு எடுத்ததா? இப்படி யாரையும் கேட்காமல் மத்திய அரசு என்ற எஜமான் சொன்னதை அடிமை அரசான எடப்பாடி அரசு செய்திருக்கிறது.


நீட் தேர்வு என்பது மாநில உரிமைக்கு வேட்டு வைப்பதோடு சமூக நீதிக்கும் எதிரானது. நீட் என்பதிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று கேட்கும் உரிமை, மாநில அரசுக்கு அரசமைப்பு சட்டப்படி பறிக்கப்பட முடியாத உரிமை ஆகும்.
டெல்லிக்கு பல முறை காவடி எடுத்து கெஞ்சிக் கூத்தாடி ஓராண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டும் கிடைக்காதது மாபெரும் வெட்கக் கேடு. விலக்கு கோரும் உரிமை மாநில அரசுக்கு உள்ள அரசமைப்புச் சட்ட கடமைகளில் ஒன்று. அதை மறுப்பதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது.


நாடாளுமன்ற நிலைக்குழு இந்த நீட் தேர்வு சட்டம் பற்றிய தனது அறிக்கையில் விலக்க வேண்டும். மாநிலத்திற்கும் அவ்வுரிமை உண்டு. மாநிலத்திற்கும் அவ்வுரிமை உண்டு என்றும் பரிந்துரை இடம் பெற்றுள்ளது.  40 எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் கோட்டை விட்டது சிறுமையை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.