கரூர் டி.என்.பி.எல் ஆலையில் அமைச்சர்கள் ஆய்வு!

கரூர் மாவட்டத்தில் உள்ள டி.என்.பி.எல் ஆலையை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.         

 


 


கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காகிதபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் காகித ஆலையை தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செல்வராஜ் ஆகியோருடன் இன்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டனர்.


ஆய்வின்போது காகித ஆலையில் இயங்கி வரும் உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம், மழைநீர் சேகரிப்புத் திட்டம் மற்றும் கரும்புச் சக்கை இறக்கும் மையத்தை பார்வையிட்டனர். மேலும், பழைய காகிதங்களில் இருந்து மையினை நீக்கி காகிதக்கூழ் தயாரிக்கும் இடம், கரும்புச்சக்கையில் இருந்து காகிதக்கூழ் தயாரிக்கும் பகுதி, மரத்துண்டிகளில் இருந்து காகிதக்கூழ் தயாரிக்கும் பகுதியையும் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து, மேற்படி காகிதக்கூழிலிருந்து காகிதம் உற்பத்தி செய்யப்படும் இயந்திரங்கள், தயாரிக்கப்பட்ட காகிதத்தில் இருந்து பல்வேறு அளவுகளில் வெட்டி, சிப்பம் கட்டும் பகுதி மற்றும் அவற்றைச் சேகரித்து வைக்கப்படும் கிட்டங்கி ஆகிய பகுதிகளையும் பார்வையிட்டு, அதுதொடர்பாக பல்வேறு தகவல்களை கேட்டறிந்துகொண்டனர். பின்னர், ஆலை வளாகத்தில் உள்ள ஆய்வு கூட்டரங்கத்தில், காகித நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன் ஆலையின் முன்னேற்றம் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது, "இங்கு நடந்து வரும் பணிகள் மேம்பாடு திருப்திகரமாக உள்ளது. மேலும், ஆலையின் காகித உற்பத்தியை பெருக்கி, லாபத்தை அதிகரித்தல் மற்றும் காகித நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அதைத் தொடர்ந்து அவை மேம்படுத்தப்படும். மேலும், போக்குவரத்துத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கரூர் நகர மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வேப்பமர நிழலுடன் கூடிய நடைப்பயிற்சிப் பாதை அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.


அடுத்து பேசிய, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "இதன் செயல்பாடுகள் குறித்து தொழில்துறை அமைச்சர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்துள்ளார்கள். ஆலை மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து மேற்கொள்ளப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!