வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (26/08/2017)

கடைசி தொடர்பு:19:50 (26/08/2017)

' கொறடா உத்தரவை மீறினால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவர்' - ஹெச்.ராஜா

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறினால் ஒரு விநாடி கூட சட்டமன்ற உறுப்பினர்களாக நீடிக்க முடியாது என்று பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். 

ஹெச்.ராஜா


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட அவர், ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ’ கொறடாவின் உத்தரவை எம்.எல்.ஏ-க்களால் மீறமுடியாது. சட்டப்படி ஒரு கட்சியில் இருந்து சரிபாதி எம்.எல்.ஏ-க்கள் வெளியேறினால்தான் அது பிளவு. இல்லையென்றால் அது அணி மாறுதல் மட்டுமே. ஆகவே, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த 19 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க. கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தால், ஒரு விநாடி கூட சட்டமன்ற உறுப்பினர்களாக நீடிக்க முடியாது’ என்று அவர் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தலைமைச் செயலகத்தில் ஹெச்.ராஜா சந்தித்துப் பேசியிருந்தார். 


அ.தி.மு.க-வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அணிகள் ஒன்றிணைந்துள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கோரி, அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள 19 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால், ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.