வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (26/08/2017)

கடைசி தொடர்பு:16:49 (02/07/2018)

கரூர் காவிரியில் குளிக்க நினைப்பவர்களே...உஷார் உஷார்!.


                   
 

கரூர் மாவட்டத்தில், ஓடும் காவிரியில் குளிக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளர். கரூர் மாவட்ட காவிரியில் மணல் அள்ளி முரட்டுக் குழிகள் ஆங்காங்கே உள்ளன. அவற்றில் மாற்றி இறக்க நேரிடும் அபாயம் இருப்பதால்தான், இத்தகைய எச்சரிக்கையை செய்துள்ளனர்.


முந்தைய வருடங்களை விட கரூர் மாவட்ட காவிரியில் ஆயிரம் இடங்களில் மணலை அள்ளியவர்கள்,ஆழமான குழிகளை மூடாமல் விட்டுள்ளனர். இப்போது காவிரியில் மேட்டூர் அணை தண்ணீரும்,மழை தண்ணீரும் சேர்ந்து ஓடுகிறது. அதனால்,அந்த குழிகளில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருப்பதால்,குளிப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அப்படியும் கடந்த பத்து நாட்களுக்குள் கரூர் சின்ன ஆண்டான்கோவில் பகுதியை சேர்ந்த ராம்குமார், முரளிதரன் என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள், நெரூர் பகுதியில் ஓடும் காவிரியில் நன்றாக நீச்சல் தெரிந்தவர்களாக இருந்தும் குளிக்கும்போது அத்தகைய மணல் எடுத்த குழிகளில் சிக்கி உயிரை விட்டு, சோகத்தை ஏற்படுத்தினர். அடுத்த நாளே லாலாபேட்டை பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரும் அதுமாதிரியான குழியில் மாட்டி இறந்ததாக சொல்லப்பட்டது. 


 

 

"கரூர் மாவட்டத்தில் ஓடும் காவிரியில் பல இடங்களில் ஆறு முழுவதும் மிகப் பெரும்பாலான இடங்களில் மணல் அள்ளிய பெரிய பெரிய குழிகள் உள்ளன. தற்போது மழைநீர்வரத்தும், ஆற்று நீரோடு சேர்ந்து வருவதால், மிருதுவான, இலகுவான, நைஸான மணலால் அந்த குழிகள் மூடப்பட்டு உள்ளன. பார்ப்பதற்கு அந்த  இடங்கள் நீருக்கடியில் தரைமட்டம் போல தெரிந்தாலும், மிக ஆபத்தான புதைகுழிகள் அவை. அதன்மேல் தரை என்று காலை வைத்தால், கால் வைப்பவர்களை புதைகுழியின் அடி ஆழம் வரை இழுத்து சென்றுவிடும் அபாயம் இருக்கிறது.

மேலும், அந்த குழிக்குள் நைஸான மணல் சூழ்ந்திருப்பதால், உள்ளே மாட்டியவர்களுக்கு நன்றாக நீச்சல் தெரிந்தாலும், மேலே வர முடியாமல் போய்விடும். எனவே, கரூர் மாவட்ட காவிரியில் குளிக்ககூடாது. இல்லை என்றால், கரை ஓரத்தில் அதிக தூரம் போகாமல் குளிக்கலாம். பெரும்பாலும் சிறுவர்களும், இளைஞர்களும்தான் காவிரியில் அதிக தூரம் போய் குளிக்க முயல்வார்கள். அதனால், அவர்கள் ஆற்றில் உள்ள புதைகுழிகளின் ஆபத்து உணர்ந்து காவிரியில் குளிக்காமல் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால், ஒவ்வொருவரின் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளிடம் அறிவுறுத்தி,காவிரியில் குளிக்க தடை போடலாம்" என்றார்கள்.