'ஆபரேஷன் தொடங்கிவிட்டது...': திருப்பூரில் எச்சரித்த தினகரன்! | Operation starts, Says Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (26/08/2017)

கடைசி தொடர்பு:21:45 (26/08/2017)

'ஆபரேஷன் தொடங்கிவிட்டது...': திருப்பூரில் எச்சரித்த தினகரன்!

திருப்பூர் மாவட்ட முன்னாள் எம்.பியும், தற்போது தினகரன் அணியில் அங்கம் வகிப்பவருமான சி.சிவசாமியின் இல்லத்தில் நடைபெறும் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று மாலை திருப்பூர் வந்திருந்தார் டி. டி.வி தினகரன்.

அவிநாசி அருகே அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் கட்சி தொண்டர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்து. விழாவில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், " இப்போது நடைபெற்றுக்கொண்டு இருப்பது தியாகத்துக்கும், துரோகத்துக்குமான போர் என்பது அனைவருக்கும் தெரியும். தியாகமும், நியாயமும் எங்கள் பக்கம் இருக்கிறது. சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உடனடியாகவே தமிழகத்தின் முதல்வராகவும், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும் பதவியேற்று இருக்க முடியும். இருந்தாலும் அதையெல்லாம் விரும்பாமல் பன்னீர்செல்வமே முதல்வராக தொடர வேண்டும் என்று கூறினார். அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அனைவரும் ஒருமனதாக பன்னீர்செல்வதை முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் முதல்வர் ஆன பிறகு பன்னீர்செல்வத்தின் போக்கு சரியில்லை. எதிரிகளுடன் கைகோர்த்துவிட்டார். இப்படியே சென்றால் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து. எனவே சசிகலா பொதுச் செயலாளராக தலைமையேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவரும் வந்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக சசிகலாவை தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தினால்தான் சசிகலா தலைமையேற்றார்.

பின்னர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு சசிகலாவால் தமிழக முதல்வராக பதவியேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, கூவத்தூர் விடுதியில் இவர்களை நாங்கள் அப்படியே விட்டுவிட்டு சென்றிருந்தால், இவர்களால் ஆட்சியை நடத்தியிருக்க முடியுமா..? கட்சியின் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்று இருப்பார்களா? என்பதை கொங்கு மண்டல மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். நாங்கள் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள். இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தில் யாரும் சாதி பார்த்துப் பழகுவது இல்லை. சசிகலா நினைத்திருந்தால் என்னையே முதல்வராக தேர்வு செய்திருக்க முடியும். ஆனால் ஜெயலலிதாவோடு இருந்த முக்கிய அமைச்சர்களில் ஒருவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கருதி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுத்தார். கவர்னரை சந்தித்து எடப்பாடியை முதல்வராக தேர்ந்தெடுத்த கடிதத்தை கொடுக்கும்போதுகூட அமைச்சர்கள் தங்கமணியும், எஸ்.பி வேலுமணியும் என்னை துணை முதல்வர் ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் பதவியைவிட இந்த கழகத்தை காப்பாற்றத்தான் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். எனவே அதெல்லாம் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டேன்.

அதன் பின்னர் ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் நான் போட்டியிட்டபோதுகூட என்னுடன் ஜீப்பிலும், ஆட்டோவிலும் எனக்காக வாக்குக் கேட்டு வந்தார்கள் எடப்பாடியும், மற்ற பிற அமைச்சர்களும். ஆனால் அந்த தேர்தல் நடைபெறாமல் போன பிறகு இவர்களுக்கு என்னவாயிற்று என தெரியவில்லை. சட்டென தங்களின் நிலைப்பாட்டை மாற்றிவிட்டார்கள். அதன் பின்னர் இந்த ஆட்சி உருவாக காரணமாக இருந்த பொதுச் செயலாளர் சசிகலாவையே கட்சியில் இருந்து நீக்குவோம் என்று அறிவித்த பிறகு என்னை சந்திக்க வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கொதித்துப்போனர்கள். ஆனால் எதையும் அமைதியாகவும், அதே சமயம் வீரத்துடனும் எதிர்கொள்ளும் சுபாவம் கொண்டவன் நான்.


இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு காரணமாக இருந்த, கடந்த வாரம் வரை எடப்பாடி அரசு ஊழல் ஆட்சி நடத்துகிறது என்று விமர்சனம் செய்த பன்னீர்செல்வத்தை, கட்சியை ஒன்றிணைக்கிறோம் என்ற போர்வையில், வியாபார உடன்படிக்கை செய்வதைப் போன்று மீண்டும் கட்சிக்குள் அழைத்து வந்து பொறுப்புகளை கொடுத்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம் அமைச்சர்களாக அமரவைத்த சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கினால் தொண்டர்கள் எப்படி பொறுத்துக்கொள்வார்கள். என்னை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பயத்திலே சென்று புதுச்சேரி விடுதியில் தங்கவில்லை. எடப்பாடியோடு இருந்தால் என்னென்ன சலுகைகளை எல்லாம் அனுபவிக்கலாம் என்பதை விட, இந்த கட்சியைக் காப்பாற்றி, நல்லமுறையில் அடுத்த தலைமுறையின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் ஒன்றாக சென்று புதுச்சேரியில் தங்கியிருக்கிறார்கள். இப்போது வரையில் வெளிப்படையாக 21 பேர் வெளியே வந்திருக்கிறார்கள். மேலும் ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் மற்றவர்களும் இனி ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். தவறான நபர்களிடம் இருந்து கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற நினைப்பவர்களுக்கு நான் பக்க பலமாக இருப்பேன். ஆபரஷன் தொடங்கிவிட்டது. இனி கட்சியைப் பலப்படுத்தும் பல அறுவை சிகிச்சை தொடர்ந்து நடைபெறும்" என்றார்.