வெளியிடப்பட்ட நேரம்: 23:12 (26/08/2017)

கடைசி தொடர்பு:23:12 (26/08/2017)

'அ.தி.மு.க அணிகளை ஆதரிக்க வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இல்லை' – நாராயணசாமி

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்துள்ளதாக புகார் வந்ததால்தான் அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் போலீசார் ஆய்வு செய்தனர் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி

எடப்பாடி-பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததையடுத்து தமிழக அரசியல் களம் பல்வேறு அதிரடித் திருப்பங்களை சந்தித்து வருகிறது. ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் அணிகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பை அளித்தது நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு. மத்திய பா.ஜ.க-விற்கு ’செக்’ வைப்பதற்காகத்தான் தினகரன் தலைமையிலான அ.தி.மு.க அணிக்கு நாராயணசாமி ஆதரவு தெரிவிக்கிறார் என்று தகவல் பரவியது. அதேபோல புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் “காங்கிரஸ் ஆட்சி அ.தி.மு.க-விற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ”புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க-வின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க-விற்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. புதுச்சேரி ஒரு சுற்றுலா நகரம். அதனால் யார் வேண்டுமானாலும் இங்கு வந்து தங்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு பாதிப்பதாக புகார் வந்தால் கண்டிப்பாக மாநில அரசு நடவடிக்கை. அதேபோல அ.தி.மு.க-வின் எந்த அணிகளையும் காங்கிரஸ் ஆதரிக்காது. அதற்கான அவசியமும் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. மேலும் அக்கட்சியைச் சேர்ந்த எந்த அணிகளும் புதுச்சேரி வந்து தங்கலாம். அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரத்தில் காங்கிரஸ்  தலையிடாது. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்துள்ளதாக புகார் வந்ததையடுத்தே அவர்கள் தங்கியிருந்த விடுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க