Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவர்களை வாசிப்பு தளத்துக்கு அழைத்து வந்த இளம் சி.இ.ஓ. ஜெயக்குமார்!

நேஷ்னல் புக் டிரஸ்ட்  மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் இணைந்து மாபெரும் புத்தகத் திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறது. வேலூர் ரோடு, அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசானிய மைதானத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா கடந்த 18-ம் தேதி தொடங்கி  27-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான முயற்சியை முன்னெடுத்து சென்றவர் கலெக்டர் பிரசாத் மு.வடநேரே.

விகடன், உயிர்மை, வம்சி, காலச்சுவடு, பரிசல், கீழைக்காற்று, வ.ஊ.சி பதிப்பகம் என தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களின் 120 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத் திருவிழாவின் முதுகெலும்பு பள்ளிக் கல்வித் துறை தான். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் அனைத்து பள்ளிகளும் புத்தகத்திருவிழாவுக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அது மட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டிப்பாக ஒரு புத்தகத்தையாவது வாங்கி வாசிப்பை வழக்கப்படுத்திக் கொள்ள  வேண்டும் என சொல்லி இருக்கிறார். அதனால் ஒவ்வொரு ஒன்றியமாக தனியார் பள்ளி வாகனங்கள் மூலம் மாணவர்கள் புத்தகத் திருவிழாவை பார்வையிட அழைத்து வரப்படுகிறார்கள். மாணவர்களின் கையில் பொத்தி வைத்திருக்கும் பத்து, இருபது ரூபாய்க்கு சிறுவர்கதைகள், திருக்குறள் புத்தகங்களை வாங்குகிறார்கள்.

மாவட்டத்தில் பெரும்பாலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை செய்வதால் பணம் கொடுத்து விடுவது குறைவாகதான் இருக்கிறது. அதனை தாண்டி பொருள்காட்சியை காண்பது போன்ற பரவசம் தான் புத்தகத் திருவிழாவில் மாணவர்களின் முகத்தில் தெரிகிறது. சி.இ.ஓ.ஜெயக்குமார் இதற்கு முன்னதாக கல்வியறிவு அதிகமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி.இ.ஓ.வாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்குமுன் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். குமரியில் இருக்கும்போது பல திட்டங்களை செயல்படுத்தினார். 37 வயதான அவர் மிக வேகமாகவும், துடிப்பாகவும் செயல்பட்டும் இளம் வயது சி.இ.ஓ. என குமரியில் லைக்ஸ்களை அள்ளி குவித்தார். அதனால் குமரியில் பல சி.இ.ஓ.க்கள் வந்து சென்றாலும் ஜெயக்குமாரின் பெயர் இன்றும் துலங்குகிறது. தற்போது திருவண்ணாமலையில் புத்தகத் திருவிழாவை நடத்துவதில் முக்கியப் பங்கு சி.இ.ஓ. ஜெயக்குமாருக்கு இருக்கிறது. புத்தகத் திருவிழாவில் செயலாளராக இருந்து தினமும் நிகழ்வுகளை கவனித்து வருகிறார். தினமும் புத்தகத் திருவிழாவில் வந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து பேசுகிறார். அப்போது மாணவர்கள் தாங்கள் வாங்கிய புத்தகங்களை அவரிடம் காண்பித்து கையெழுத்து பெற்று செல்கின்றனர். அவரும் எத்தனை மாணவர்கள் நின்றாலும் அசராமல் கையெழுத்து போட்டு விட்டு தான் கடந்துச் செல்கிறார்.

புத்தகத் திருவிழாவுக்கு வருபவர்களும் சி.இ.ஓ. ஜெயக்குமாருடன் போட்டோக்கள் எடுத்து செல்கிறார்கள். சி.இ.ஓ.வின் உத்தரவின் படி மாணவர்களின் கையில் புத்தகங்கள் இருக்கிறது. ஆனால் ஒரு சில ஆசிரியர்களின் கையில் மட்டும்தான் புத்தகங்கள் இருக்கிறது. வாசிப்பு உலகத்துக்குள் திருவண்ணாமலையில் மாணவர்கள் நுழைந்து விட்டார்கள். பொதுவாக எழுத்தாளர்களிடம்தான் கையெழுத்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் திருவண்ணாமலையில் சி.இ.ஓ.விடம் பலரும் கையெழுத்து வாங்கி செல்லுவதை சமூக ஆர்வலர்கள் பாராட்டுகிறார்கள். வாழ்த்துக்கள் சி.இ.ஓ.சார்! 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement