Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்சி பதவி பறிப்பு! - தினகரன் அறிவிப்பு

சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விடுவிக்கப்படுவதாக அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.கவில் உட்கட்சிப் பூசல் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. அணிகள் இணைப்புக்கு டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தங்கள் அணிக்கு மேலும் பல எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் தினகரன் தரப்பினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். 
மேலும், துணைப்பொதுச்செயலாளர் என்கிற முறையில் தமிழகம் முழுவதும் கட்சிப் பதவியில் இருப்பவர்களை நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் தினகரன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆனால், அவரது கட்சி நியமனங்கள் எதுவும் செல்லாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த குமார் எம்.பி., ’தினகரனுக்கு தைரியம் இருந்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சிப் பதவியில் இருந்து நீக்கட்டும்’ என்று சவால் விடுத்திருந்தார்.
இந்தநிலையில், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விடுவிப்பதாக தினகரன் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். மேலும், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக வீரபாண்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.செல்வம் நியமிக்கப்படுவதாகவும் தினகரன் அறிவித்துள்ளார். அதேபோல், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடாஜலம் விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக எஸ்.இ.வெங்கடாச்சலம் நியமிக்கப்படுவதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார். இந்த நியமனங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடு வெளியிடப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement