வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (27/08/2017)

கடைசி தொடர்பு:17:30 (28/08/2017)

கட்சி பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்ட தேனி வந்த தினகரன்!

தேனிக்கு நேற்று இரவு வந்த டி.டி.வி தினகரன், இன்று காலை தனது ஆதரவாளர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்டார். அங்குகட்சி பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டினார்.

dinakaranதேனி மாவட்டத்தில் டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் உள்ளனர். மொத்தமே நான்கு தொகுதிகளை உடைய தேனி மாவட்டத்தில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களே அதிகம். போடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பன்னீர்செல்வம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்திபனைத் தவிர மற்ற அனைத்து கட்சி நிர்வாகிகளும், மாவட்ட, வட்ட, கிளைக்கழக, ஒன்றிய என அனைத்துப்பிரிவு கட்சி நிர்வாகிகளும் டி.டி.வி தினகரன் பக்கமே இருக்கிறார்கள்.

வலுவான ஆதரவாளர்களை தேனி மாவட்டத்தில் தினகரன் உருவாக்கியுள்ளதால், நேற்று இரவு ஒரு மணியளவில் தேனிக்கு வந்திறங்கிய தினகரனுக்கு தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து, வெஸ்டன்கேட் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்தார் தினகரன்.

இன்று காலை, திடீரென அறிக்கை வெளியிட்ட தினகரன், சேலம் மாவட்ட புறநகர் கழக செயலாளர் பதவியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கப்படுவதாக அறிவித்தார். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் அனுமதி பெற்றே இந்த நீக்க நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டார். தொடர்ந்து பலரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி அறிவித்து வரும் தினகரன், எடப்பாடி பழனிச்சாமியை நீக்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தைச்சேர்ந்த கட்சி பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டிய தினகரன், அடுத்ததாக மதுரை சென்று அங்கிருக்கும் கட்சி பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்ட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி அணியும் இணைந்த போது, கட்சி பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலா மற்றும் தினகரன் நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த நீக்கத்தை எதிர்க்க தினகரன் தரப்பிற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அவசியம். இந்நிலையில் அவரும், அவரது ஆதரவாளர்களும் கட்சி பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.