’எடப்பாடி அணியில் இருக்கிறேன்.. ஆனால் தினகரனை சந்திக்க வந்திருக்கேன்’ - குழப்பிய ஏ.கே.போஸ் | AK Bose met TTV Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (27/08/2017)

கடைசி தொடர்பு:16:07 (27/08/2017)

’எடப்பாடி அணியில் இருக்கிறேன்.. ஆனால் தினகரனை சந்திக்க வந்திருக்கேன்’ - குழப்பிய ஏ.கே.போஸ்

தேனியில் தனது ஆதரவாளர்களின் இல்ல விழாக்களில் தொடர்ச்சியாக கலந்துகொள்ள வந்த டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்தார் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வான ஏ.கே.போஸ். இதனால் தினகரன் தரப்பிற்கான ஆதரவு எம்.எல்.ஏ க்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால், தினகரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த  எம்.எல்.ஏ போஸ், "நான் இப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் தான் இருக்கிறேன். வரும் திங்கள் கிழமை சிறையில் சசிகலாவைச் சந்தித்து பேசிய பிறகே ஏனது முடிவை அறிவிப்பேன்." என்றார். அதைக்கேட்ட பத்திரிக்கையாளர்கள், "இப்போது தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்க வரவில்லையா?" என்று கேட்டனர், அதற்கு பதிலளித்த அவர், "நான் எடப்பாடி அணியில் இருக்கிறேன். ஆனால் தினகரனை சந்திக்க வந்திருக்கேன். பிறகு சசிகலாவை சந்திப்பேன்" என்று உளற ஆரம்பித்தார்.

இதனால் பத்திரிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த நிகழ்வின் போது,  ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.  இன்று காலை ஆளுநரைச் சந்தித்த எதர்க்கட்சியை சேர்ந்தவர்கள், ஆளும் அதிமுக அரசு பெரும்பான்மை இல்லாமல் இருப்பதால், பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி அரசை கோருமாறு வலியுறுத்தினர். இந்நிலையில், ஏ.கே.போஸ், தினகரனுக்கு ஆரதரவு தெரிவித்தால், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மேலும் சிக்கல் அதிகரிக்கும்.