’அத்தைக்கு மீசை முளைப்பது போல என்னை தகுதி நீக்கம் செய்வது’ - தினகரன்

தேனியில் இன்று தன் ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த டி.டி.வி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொதுக்குழு கூட்டி என்னை தகுதிநீக்கம் செய்வது அத்தைக்கு மீசை முளைப்பது போல, அது நடந்தால் பார்க்கலாம்" என்றார்.

dinakaran

மேலும் பேசிய அவர், "என்னைப்பொருத்தவரை 122 சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கள் ஆதரவாளர்கள் தான். சிலர் பதவி ஆசைக்காக, தான் வளர்ந்த, தன்னை வளர்த்த இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை என்று செயல்படுகிறார்கள். தற்போது கட்சியில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களில் 90%பேர் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான். தற்போது அம்மா இல்லை என்பதால், சுயநலமாக செயல்படுகிறார்கள். எங்களை அழிக்க நினைத்து, தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தான் உண்மையான இயக்கம். எங்களுடன் இருப்பவர்கள் கழகத்தை மீட்கும் போராளிகள். புதுச்சேரில் தங்கியிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களைப் போல சுயநலத்திற்காக இல்லை, கொள்கைக்காக இருக்கிறார்கள். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அம்மா உயிருடன் இருந்த போது ராணுவ ஆட்சி போல கழகத்தை வழிநடத்தினார் என்றால், அதற்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசிய போது, '20 ஆண்டு நேரடி அரசியல் அனுபவம் உள்ள நீங்களே கட்சியை வழிநடத்திச் செல்லுங்கள், கழகத்தை மீட்க என்ன முடிவும் எடுக்கலாம்' என எனக்கு முழு உரிமை அளித்திருக்கிறார். தற்போது தமிழகத்தில் நடப்பது தியாகத்திற்கும், துரோகத்திற்குமான யுத்தம். கட்சி பொதுக்குழுவைக் கூட்டி என்னை தகுதி நீக்கம் செய்வது அத்தைக்கு மீசை முளைப்பது போன்றது. அது நடக்கும் போது பார்க்கலாம்’ என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தினகரன் அருகில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் மற்றும் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!