Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்த பாட்டி!

'ஏழைகளுக்கான திட்டங்களை கொண்டு வந்தால் நீங்கதான் தொடர்ந்து ஜெயிப்பீங்க' என பாட்டி ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்த சம்பவம் மிக நெகிழ்ச்சியாக இருந்தது.

முதல்வர் எடப்பாடி

திருச்சி மாவட்டம் முசிறி எம்.எல்.ஏ. செல்வராஜ் மகன் ராமமூர்த்தி-கலைச்செல்வி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  சேலம் வழியாக திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்துக்கு இன்று காலை வந்தார்.

முதல்வரின் வருகைக்காக சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் வரவைத்து பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

திருமணத்துக்கு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும் எம்.பியுமான ரத்தினவேல், திருச்சி எம்.பி குமார், மணப்பாறை எம்.எல்.ஏ சந்திரசேகர் ஆகியோர் சகிதமாக மேடையேறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தினார்.

விழாவில் பத்திரிக்கையாளர்களுக்கு கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பத்திரிக்கையாளர்களை சந்திக்கமாட்டார் என பாதுகாப்பு அதிகாரிகள், மிகவும் கறார் காட்டினார்கள். முதல்வர் எடப்பாடி மணமக்களுடன் இருப்பதையாவது, பதிவு செய்துக்கொள்கிறோம் என பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து, அதிகாரிகளிடம் வலியுறுத்திய பிறகே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதும், மைக் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் எடப்பாடி, மண்டபத்தில் இருந்து வெளியே வந்த முதல்வர், அந்த குறுகிய சாலையில் செல்வதற்கு சிரமமாக இருக்கவே, தடுப்புகள் போடப்பட்டிருந்தாலும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே, 10 அடிதூரம் நடந்தே வந்து, தனது காரில் ஏறினார். அப்போது நடந்து வந்த முதல்வர் எடப்பாடி எடப்பாடியின் கையைப் பிடித்த வயதான பாட்டி ஒருவர், கையெடுத்து கும்பிட்டபடி,“எங்களைப் போன்ற ஏழைங்களுக்கு தேவையான கோரிக்கைகளை செய்யுங்க. அடுத்த முறையும் நீங்கதான் ஜெயிப்பீங்க எனச் சொல்ல. கண்டிப்பாக செய்றேம்மா”என எடப்பாடி வாக்குறுதி கொடுத்தார். அதைக்கேட்டு, அப்பகுதி மக்கள் முதல்வருக்கு கையெடுத்து கும்பிட்டபடி வழியனுப்பி வைத்தனர்.

இறுதிவரை பத்திரிகையாளர்களை எடப்பாடி சந்திக்கவில்லை. ஆனால் இவ்விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,“மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், மூத்த நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலம் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அப்படி நீக்குவதற்குத் தினகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதனை ஜெயலலிதாவின் ஆன்மா நிச்சயம் மன்னிக்காது. அவர் கீழ்ப்பாக்கம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. சட்டசபையில் கொண்டுவர உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டுமல்ல, எதையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார், சமாளிப்பார், அதில் வெற்றியும் பெறுவார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரன், சின்னம்மாவின் படத்தை மறைத்து ஓட்டு கேட்டது ஏன்? தெம்பிருந்தால், திராணியிருந்தால், அன்று சசிகலா படத்தை போட்டு ஓட்டுக் கேட்டிருக்க வேண்டியதுதானே?. ஆட்சி, அதிகாரம் அனைத்திலும் செல்வாக்கை இழந்த தினகரன் இன்று அ.தி.மு.க. நிர்வாகிகளை நீக்கம் செய்வது சரியல்ல. முடிந்தால் என்னை திருச்சி மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கட்டும் என அவர் சவால் விடுத்தார்.

முதல்வர் எடப்பாடி

இதேபோல், நேற்றிரவு சேலத்துக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவில்லை. ஆனால் அப்போதும் முதல்வரும் அவருடன் இருந்த சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வெங்கடாச்சலம்தான்.

தினகரன் ஏற்கனவே ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர். தற்போது அ.தி.மு.க.வில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். தினகரனுக்கு அ.தி.மு.க.வில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை. தினமும் விளையாட்டு போல தினகரன் அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகக் காட்டமாக பேட்டியளித்தார்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் நடைபெற்ற கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ ஆறுமுகம் இல்ல திருமணத்தில் கலந்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். அவருடன்  வந்த அவரது ஆதரவாளர் ஒருவரே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

எடப்பாடி பழனிசாமி ஏன் பத்திரிகையாளர்களை புறக்கணிக்கிறார். நாளையே  ஓ.பி.எஸ் அணியுடன் எடப்பாடிஇணைந்ததுபோல், தினகரன் அணிகள் இணைந்தால், தான் மட்டும் தப்பிக்கொள்ளலாம் என பத்திரிக்கையாளர்களிடம் பேசவேண்டிய முதல்வர், வாய் திறக்க மறுக்கிறாரோ என அ.தி.மு.கவினரே பேச ஆரம்பித்துவிட்டனர்.   

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement