வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (28/08/2017)

கடைசி தொடர்பு:18:37 (09/07/2018)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 232 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன!

ராமநாதபுரத்தில், ஞாயிற்றுக்கிழமை நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பல்வேறு வடிவங்களிலான 34 விநாயகர் சிலைகள் நொச்சிவயல் ஊருணியில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதூர்த்தி ஊர்வலம்


ராமநாதபுரம் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 232 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை மாலை பரமக்குடி, தேவிபட்டினம், மண்டபம் மற்றும் ராமேஸ்வரத்தில் இந்து முன்னணியினர் வைத்திருந்த விநாயகர் சிலைகள், முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச்செல்லப்பட்டு அக்னி தீர்த்த கடல், மற்றும் ஊருணியில் கரைக்கப்பட்டன.  இதைத் தொடர்ந்து நேற்று மாலை, ராமநாதபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகரில் உள்ள 34  விநாயகர் சிலைகள் அருள்மிகு வழிவிடு முருகன் கோயில் முன்பாக இந்து முன்னணி சார்பில் ஒன்று சேர்க்கப்பட்டு, விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடந்தது.


ஊர்வலத் தொடக்க விழாவுக்கு, இந்து முன்னணி நகர் தலைவர் கே.கோட்டைச்சாமி தலைமை வகித்தார்.  விநாயகர் சதுர்த்தியின் சிறப்புகள்குறித்து பா.ஜ.க.மாநிலப் பேச்சாளர்கள் எஸ்.ஆர்.சேகர், ஆர்.கல்யாணராமன், இந்து முன்னணியின் மாநிலப் பேச்சாளர்கள் கே.என்.கெங்காதரன்,கே.ரெத்தினசபாபதி, துணைத் தலைவர் ஆ.சரவணன் ஆகியோர் பேசினார்கள் .ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மாநிலச் செயலாளர் ஆ.ஆடலரசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த 34 விநாயகர் சிலைகள் வரிசையாக வந்தன. ஊர்வலத்தில், பா.ஜ.க.தலைவர் கே.முரளீதரன், மாவட்டச் செயலாளர் ஆத்ம.கார்த்திக், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, தொழிலதிபர் அரு.சுப்பிரமணியன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


ஊர்வலம், அருள்மிகு வழிவிடு முருகன் கோயிலிலிருந்து தொடங்கி, வண்டிக்காரத் தெரு உட்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, நொச்சிவயல் ஊருணியில் நிறைவுபெற்றது. பின்னர், அங்கு அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. ராமநாதபுரம் எஸ்.பி.ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ராமேஸ்வரத்தில் நடந்த ஊர்வலத்தில் 12 விநாயகர் சிலைகள் பங்கேற்றன. இதேபோல தேவிபட்டினத்தில் நடந்த ஊர்வலத்தில் 11 விநாயகர் சிலைகளும், சாயல்குடி அருகே நரிப்பையூரில் நடந்த ஊர்வலத்தில் ஒரு விநாயகர் சிலையும் பங்கேற்றிருந்தன. திருப்புல்லாணியில் நடந்த ஊர்வலத்தில்  ஐந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.