வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (28/08/2017)

கடைசி தொடர்பு:12:00 (28/08/2017)

’வரலாறு காணாத வறட்சி!’ - நெல்லையில் 2,518 குளங்கள் வறண்டன

வரலாறு காணாத வறட்சியின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,518 குளங்களும் வறண்டுகிடக்கின்றன. இதனால், விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

வறட்சி

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, ராமநதி, கடனா, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குப்பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என 11 அணைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 13,765 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்க முடியும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், நீர் இருப்பு 1,659 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், 19.2 சதவிகித நீர் இருப்பு இருந்த நிலையில், தற்போது 12.1 சதவிகித தண்ணீர் மட்டுமே அணைகளில் இருப்பு உள்ளது.

தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தை மட்டும் நம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்  86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் இந்த ஆண்டு, பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் குறைவான தண்ணீரே இருப்பதால், நெல் பாசனம் செய்யாமல் விவசாயிகள் மழைக்காகக் காத்திருக்கின்றனர். நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை, சராசரியாக 814 மி.மீ மழை பெய்யும். கடந்த ஆண்டு, இந்த இயல்பான மழையளவைவிடவும் 51 சதவிகிதம் குறைவாகப் பெய்தது. நடப்பாண்டில் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

வறண்ட அணை

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,518 குளங்கள் உள்ளன. இதில், 1.221 குளங்களுக்கு அணைக்கட்டுகளின் கால்வாய்கள் மூலமாக தண்ணீர் செல்வதால், அவை நிரம்பும். 1.297 குளங்கள் மானாவாரிகள். மழை பெய்தால் மட்டுமே அவை நிரம்பும். கடந்த ஆண்டின் வடகிழக்குப் பருவ மழை மற்றும் நடப்பு ஆண்டின் தென்மேற்குப் பருவமழை ஆகியவை பொய்த்துப்போனதால், மொத்தம் உள்ள 2,518 குளங்களும் வறண்டுகிடப்பதாக, நெல்லை மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அணைகள், குளங்களில் நீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாகக் குறைந்துவிட்டது. கிணறுகளில் படுபாதாளத்துக்கு தண்ணீர் சென்றுவிட்டது. இதனால், மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாததால், இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் வெறும் 966 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல கரும்பு, சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவையும் மிகக் குறைவாகவே சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இது, விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.