வெளியிடப்பட்ட நேரம்: 20:38 (30/08/2017)

கடைசி தொடர்பு:20:43 (30/08/2017)

'அரசாங்கமும் உதவல; சங்கமும் உதவல'- குமுறும் மண்பானைத் தொழிலாளர்!

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" !

என்ற சித்தர் பாடலை நாம் கேட்டிருப்போம். பழங்காலத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்திவந்த மண் பாண்டங்களை இப்போது சமைப்பவர்களுக்குத் தெரியுமா? நம் பாட்டன், பாட்டிகள் 100 வயது வரை வாழ்ந்ததுக்கு இந்த மண் பானைகளே காரணம். இன்று, எங்க வீட்டுல குக்கர் இருக்கு, எங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்குனு சொல்றோம். அது எல்லாமே நமக்கு நோயாக் கொண்டுவந்துடுதுங்கிறது, சொந்த வீட்டுல சூனியம் வெச்ச கதைதான். நம் அன்றாட வாழ்க்கையை எளிமைப்படுத்த வந்த பொருள்தான் இது. ஆனா, உணவை நல்லா வேகவெச்சு சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறிப்போச்சு. அப்படி என்னதான் இந்த மண்பானையில் இருக்குனு கேக்குறீங்களா? அதைத்தான் சொல்லுறார், சாமி.

''எங்க பாட்டன் காலத்துல இருந்து நாங்க இந்தத் தொழிலைச் செஞ்சுட்டு இருக்குறோம். அந்தக் காலத்துல, குளத்துல இருந்து களிமண்ணை எடுத்துக்கிட்டு வந்து, நால்லா இடிச்சு, சலிச்சு மண்ணை நல்லா பெசஞ்சு ஒரு கல்லு மண்ணு இல்லாம எடுத்து சக்கரத்துல வெச்சு சுத்துறதுக்குள்ள நாங்கப்படுற பாடு இருக்கே, இடுப்பு ஒடுஞ்சு போயிரும். ஆனா, இவ்வளவு பாடுபட்டு பானையைச் செஞ்சு, அதைச் சூளையில வெச்சு சுட்டு, அதை சைக்கிள்ல  எடுத்துக்கிட்டு ஊர் ஊரா போவோம். அப்போ, ஒரு சட்டிக்கு ஒரு மரக்கா தானியம்னு தருவாங்க. அன்னிக்கு இருந்தவங்க மண்சட்டியிலேதான் சோறு ஆக்குவாங்க, கொழம்பு வெச்சாங்க. எனக்கு 65 வயசாகுது. மழைக்காலத்துல எங்களால தொழிலை ஒழுங்கா செய்ய முடியாது. அப்போ, குடிக்கக்கூட கஞ்சி இருக்காது. இன்னைக்கு, எங்களுக்காக சங்கம் இருக்கு. இருந்து என்னா தம்பி பண்றது? எந்த விதமான பயனும் இல்லை. உதவியுமில்லை. நான் மட்டும் அந்தச் சங்கத்துக்கு 3,000 ரூபாய் வரைக்கும் செலவு பண்ணி அட்டை வாங்கி வெச்சிருக்கேன். அரசாங்கத்துக்கிட்ட இருந்து எந்தவிதமான உதவியுமில்லை. முன்பு, பத்து பேரு வேலை செஞ்சோம்.

ஆனா இன்னைக்கு, நான் மட்டும்தான் இந்த மண்பாந்த் தொழில் செய்யுறேன். அவங்க எல்லோரும் கட்டட வேலைக்குப் போறாங்க. ஆனா, எங்களோட வருத்தம் எங்களுக்குத்தான் தெரியும். வரவனை,வீரணம்பட்டி கோவில்பட்டி, ஐயம்பாளையம்னு அத்தனை ஊருலையும் வேலை செஞ்சோம். ஆனா இன்னைக்கு, ஊருக்கு ஒருத்தர் ரெண்டு பேருனு இருக்கோம். புரட்டாசி,தை மாசம்  கொஞ்சம் அதிகமா விக்கும்.50 ரூபா ரேட் போட்டா, அதுலையும் இந்த சனங்க 10 ரூபாய குறைச்சுதான் குடுக்குறாங்க. என்ன செய்றது! எங்களுக்கு அரசாங்கமும் சரி, எங்க சங்கமும் சரி, எந்த வகையிலையும் உதவுரதா இல்லை.

அடுத்து, 85 வயது முருகாயி சொல்லும்போது, ''நாங்க பொம்பளைங்க ஏதோ, எங்களால முடிஞ்ச அடுப்பு, குருது, குருதாலி, கிளிக்கூண்டு, அடுக்குப் பானை வெளக்குச் சட்டி, கலயம், மாப்பள பொண்ணுக்கு கரவக்கலயம் எல்லாத்தையும் செஞ்சுட்டு இருக்கோம். மண்சட்டியில சாப்பிட்ட வரைக்கும் நோயில்ல. இன்னிக்கு ஏதோ, குக்கர அடுப்புல வெச்சு புஷ் புஷ்னு சத்தம் வந்தவுடனே எடுக்குராங்க. அது வெந்துருது. ஆனா, யாருக்குத் தெரியுது அதுல சாப்டா நோய் வருதுனு. சென்னா, இந்த ஜனம் கேக்கவே கேக்காது. இவளுக்கு என்ன தெரியும்னு எங்கள திட்டுவாங்க.

எங்களுக்கு வேற தொழிலே தெரியாது. மழை வெள்ளத்துல பாதிச்சுனா எங்களுக்கு உதவினு செய்ய ஆள் இல்லை. அரசாங்கமும் கண்டுக்க மாட்டேங்குது. என்ன பண்ணுறதுனு தெரியல. இப்படியே போச்சுனா எங்க தொழில் அழிஞ்சு போயிரும். ஒண்ணு ரெண்டு வாங்குரவுங்களும் வாங்க மாட்டாங்க. அதை என்னால நெனச்சுக்கூட பாக்கமுடியல'' என்று சொன்னவாறு கண்ணீர்விட்டார். சற்று ஆறுதலடைந்து, கரன்டு இல்லாத பிரிஜ் நாங்கதான் கண்டுபுடுச்சோம், கேஸ் இல்லாத அடுப்பும் நாங்கதான் கண்டுபுடுச்சோம்னு என்று வயிறு குலுங்கச் சிரித்தார் சாமி.

களிமண்ணில் செய்யும் பாண்டங்கள் சுடப்பட்டதும், நமக்கு நன்மை தரும் தாதுக்கள் அதில் சேர்வதாக ஆராய்ச்சியாளர்கள்  கூறுகிறார்கள். வெயில் காலத்துல மண் பானையில தண்ணீர் ஊத்தி வெச்சுக் குடிச்சா, குளிர்ச்சியா இருக்கும். ஆனா, இந்தப் பானையெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தானு நெனைக்கும்போது மனம் வருத்தமா இருக்கு. இதைக் கொஞ்சம் மக்கள் நினைத்துப்பார்த்தால்,  மண் பாண்டத்தொழிலை நம்பியிருக்கும் மக்களின் வாழ்க்கை ஒளிபெறும்.