Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்களிடம்  வழிப்பறி!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், உலகப் பிரசித்திபெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது.  ஆலய ஆண்டுத் திருவிழா, வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற உள்ளது.  

முக்கியமாக, கொடியேற்றம் நடைபெறும் நாளில் சிறப்பு திருப்பலி பூஜைகள் பலமொழிகளில் நடைபெறும்.  இதில் கலந்துகொண்டு மாதாவை தரிசிக்க பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் வருவார்கள்.  குறிப்பாக, தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் பாதையாத்திரையாக வந்து இவ்விழாவில் கலந்துகொள்வதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்.  மழை, வெயில், பனி என எதையும் பொருட்படுத்தாமல், இரவு, பகல் பாராமல் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக வேளாங்கண்ணி செல்லும் எல்லா சாலைகளிலும் நடைபயணம் சென்ற வண்ணம் உள்ளனர்.  தண்ணீர் கண்ட இடங்களில் குளித்து, நிழல்கண்ட இடங்களில் இளைப்பாறிச் செல்லும் இவர்களுக்கு, மதபேதம் பாராது இந்து, முஸ்லிம் அன்பர்கள் ஆங்காங்கே அன்னதானம், குளிர்பானம் அளிப்பார்கள்.  

இப்படிச் செல்லும் பக்தர்களிடம், டூவீலரில் வரும் கொள்ளையர்கள் வழிப்பறிசெய்வதுதான் கொடுமை.  கடந்த இரண்டு இரவுகளில் சீர்காழி முதல் கருவிழந்தநாதபுரம் வரை இடையே உள்ள 18 கி.மீ. பாதையில் 6 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன.  செல்போன், பேக் ஆகியவற்றைப் பறிகொடுத்த பக்தர்கள், இதுபற்றி காவல்நிலையங்களில் புகார் அளிப்பதில்லை.

இதுபற்றி புதுச்சேரியிலிருந்து பாதையாத்திரையாக வந்த ஸ்டாலின் அந்தோணியம்மாள் தம்பதி பேசியபோது, "கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியிலிருந்து 175 கி.மீ. தூரமுள்ள வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக வருகிறோம்.  கடந்த 23-ம் தேதி, புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு 5 நாள்கள் நடந்து, 28-ம் தேதி வேளாங்கண்ணியை அடைவோம்.  இடையில், சாலை ஓரத்தில் என்ன வசதி கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்திக்கொள்வோம். திருவிழா தொடங்கும் 29-ம் தேதி கொடியேற்றம் முடிந்தவுடன், பேருந்துமூலம் ஊருக்குத் திரும்பிடுவோம். எங்க குடும்பத்துல நாங்க மூணுபேர். அண்ணன், தம்பிகள், சகோதரிகள் இல்லை.   எனவே தனக்கு ஒரு மகள் இல்லையே என்ற வருத்தம் எங்கள் தாயாருக்கு இருந்தது.  எனக்கு திருமணம் ஆனவுடன், அம்மாவின் ஆசை தீர்க்க முதல் குழந்தை பெண்குழந்தையாக இருக்க வேண்டும் என்று மாதாவை வேண்டி பாதயாத்திரை வந்தோம்.  இரண்டாம் ஆண்டே ஒரு மகள் பிறந்தாள். அந்த வேளாங்கண்ணி மாதாவே எங்கள் குடும்பத்தில் மகளாகப் பிறந்திருக்கிறாள் என்று மகிழ்கிறோம். இதனால், ஆண்டுதோறும் ஐந்து நாள்கள் நடந்து வருவதில் எங்களுக்கு சங்கடம் ஏதுமில்லை, சந்தோஷம்தான்.  மாதாவின் அருளாள், நான் தற்போது ஒரு டிராவல்ஸுக்கு உரிமையாளராக இருக்கிறேன். மாதத்தில் ஒரு தொகையை மாதாவுக்காக நேர்ந்து சேமித்துவருவேன்.  அதை, இந்தத் திருவிழா நேரத்தில் காணிக்கையாக மாதாவுக்கு செலுத்திவிடுவேன்.  இதனால் ஆண்டுக்கு ஆண்டு நான் வாழ்வில் உயரத்துக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறேன். 

பாதையாத்திரையாக வரும் எங்களுக்கு, வழியெங்கும் உதவிகள்தான் செய்வார்கள்.  உபத்திரவம் செஞ்சதில்லை.  இந்த ஆண்டு, சீர்காழி முதல் கருவிழந்தநாதபுரம் வரை இடையில் அதிக மின்விளக்கு இல்லாததால், அதைப் பயன்படுத்தி டூவீலரில் வரும் கொள்ளையர்கள், கையில் எடுத்துவரும் பேக் மற்றும் செல்போன்களை மின்னல் வேகத்தில் பறிச்சிட்டுப் போயிடுறாங்க.  இதுபோல, எனக்குத் தெரிந்து 6 கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருக்கு.  போலீஸில் புகார் செஞ்சாலும் அதற்கு நாங்க அலையணும்.  அதனால, மாதா கொடுத்த தண்டனையா ஏத்துக்கிட்டு பக்கத்துல இருக்கிறவங்களுக்கு உதவி செய்றோம்" என்றனர்.  

இந்த கொள்ளைச் சம்பவம் பற்றி சீர்காழி டி.எஸ்.பி. சேகரிடம் தெரிவித்தபோது, "பாதையாத்திரை வருபவர்களிடம் வழிப்பறி செய்ததாக புகார் ஏதும் வரவில்லை.  என்றாலும், சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை இரவில் ரோந்து போக்குவரத்தை அதிகப்படுத்துகிறேன். வழியில் உள்ள  மூன்று காவல்நிலைய ஆய்வாளர்களையும் இந்தப் பாதையில் ரோந்துசெல்ல அறிவுறுத்துகிறேன். இத்தகைய சம்பவம் இனி நிகழாதபடி தக்க நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார் உறுதியாக.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement