வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (28/08/2017)

கடைசி தொடர்பு:18:30 (09/07/2018)

ராமநாதபுரத்தில் பாலின் தரம் ஆய்வு செய்யும் முகாம் தொடக்கம்!

பொதுமக்கள் பயன்படுத்தும் பாலின் தரம் குறித்து பரிசோதனை செய்து அறிந்து கொள்ள ஏதுவாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விழிப்புஉணர்வு முகாமினை ராமநாதபுரத்தில்  மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

பாலின் தரம் குறித்து ஆய்வு


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான பாலில் கலப்படம் செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பொதுமக்களிடையே தனியார் மற்றும் அரசு விநியோகம் செய்யும் பால் குறித்து அச்சம் ஏற்பட்டது. இந்த அச்சத்தினைப் போக்கும் வகையில் பாலின் தரம் குறித்த பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளும் வசதி EMAT (Electronic Milk Adulteration Testing) ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இந்த வசதியினை கொண்டிருக்கும் 2 வது மாவட்டமாக ராமநாதபுரம் திகழ்கிறது.  இந்தக் கருவியானது 100 %  முழுக்க முழுக்க கணிணிமய தானியங்கி கருவி ஆகும். இந்தக் கருவி மூலம் வீடுகளில் தாங்கள் பயன்படுத்தும் பாலின் தரம் குறித்தும், அதில் கலப்படம் ஏதும் செய்யப்பட்டுள்ளதா என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். பால் உணவு மாதிரிகள் பகுதிவாரியாக சேகரிக்கப்பட்டு உணவுப் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன் முடிவுகள் உடனடியாக உபயோகிப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்படும். 


இன்று ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் ராமநாதபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் பயன் பெற முடியும். இது தவிர இந்தச் சிறப்பு விழிப்புஉணர்வு முகாம் செப்டம்பர் 6-ம் தேதி வரை ( அரசு விடுமுறை தினங்கள் தவிர) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு தாங்கள் பயன்படுத்தும் பாலின் தரம் மற்றும் தன்மை குறித்து அறிந்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.