”சசிகலாவின் நியமனங்கள் செல்லாது என்று அறிவிக்க முடியுமா ?” சவால்விடும் எம்.எல்.ஏ | Dinakaran team MLA challenges Edappadi palanisamy team

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (28/08/2017)

கடைசி தொடர்பு:16:45 (28/08/2017)

”சசிகலாவின் நியமனங்கள் செல்லாது என்று அறிவிக்க முடியுமா ?” சவால்விடும் எம்.எல்.ஏ

”அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், இன்றைக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் அணிக்கு ஆதரவானவர்கள்” என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருக்கிறார்.

தினகரன்

எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க-வின் இரு அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து, கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு அதிரடித் திருப்பங்கள் நடைபெற்றுவருகின்றன. இன்று, சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பது உள்ளிட்ட  நான்கு தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பு.

இதுகுறித்து புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன், “தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி-க்கள் மற்றும் செயலாளர்களுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல, இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர், கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. இன்று நடைபெற்ற கூட்டத்தில், சின்னம்மாவையும் தினகரனையும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவரான மனோஜ் பாண்டியன், கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர். அவருக்கு எப்படித் தீர்மானத்தை முன் மொழியும் அதிகாரம் இருக்கும். துணைப் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்று தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள், பொதுச்செயலாளர் சசிகலாவால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்று அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்தால், அவர்கள் யாரும் எந்தப் பொறுப்பிலும் இருக்கமாட்டார்கள்.

மேலும், இன்று நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களில் எதுவுமே செல்லாது. பொதுச்செயலாளரான சசிகலாவால் மட்டும்தான் பொதுக் குழுவைக் கூட்ட முடியும். தற்போது அவர் சிறையிலிருப்பதால் நான்கில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன், துணைப்பொதுச் செயலாளரான தினகரனுக்கு மட்டுமே பொதுக்குழுவைக் கூட்ட அதிகாரம் இருக்கின்றது. அதை மீறி அவர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும். அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்றைக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் அணிக்கு ஆதரவானவர்கள்” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க