வனத்துறை சட்டத்துக்கு எதிராக மீனவப் பெண்கள் போராட்டம்!

பாரம்பர்ய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், அவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் வகையிலும் உள்ள மத்திய அரசின் வனத்துறை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி மன்னார் வளைகுடா கடற்கரையோர கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாரம்பரிய மீனவர் பெண்கள் ஆர்ப்பாட்டம்


 மன்னார் வளைகுடா பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. வன உயிரினங்களின் சொர்க்கமாகத் திகழும் இப்பகுதியினை மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இப்பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தொடங்கி தூத்துக்குடி வரையிலான கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவ மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

 கடல் பாசி சேகரித்தல், கூண்டு வைத்து மீன் பிடித்தல், நண்டு வலை, மீன் வலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பாரம்பர்ய முறையில் மீன்பிடித்து வந்த ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளில் பாசி சேகரிக்க அனுமதிக்கக் கோரியும், உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாரம்பர்ய முறையில் மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரியும், பாசி சேகரிப்பு மற்றும் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள், பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்வதை கைவிட கோரியும், பாரம்பர்ய மீனவர்களுக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள வனத்துறை சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று கீழக்கரையில்  தமிழ்நாடு மீன் பிடி தொழிற்சங்கம் (சி.ஐ.டி.யு) மற்றும் மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாதுரை, சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் மகாலெட்சுமி , மாவட்ட நிர்வாகிகள் ஜான் செளந்தரராஜ், சிவாஜி, பச்சமால், சந்தானம், மகாலிங்கம் மற்றும் ஏராளமான மீனவர்கள், கடல் பாசி சேகரிக்கும் பெண்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

பாரம்பர்ய மீனவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வனத்துறை சட்டத்தைத் திரும்பப் பெறவில்லை எனில் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளில் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!