'சண்டக்கோழி-2': பின்னி மில்லில் மதுரை செட் ரெடி!

ஆரம்பத்தில் சாதாரணமான கதை கொண்ட திரைப்படங்களில் நடித்துவந்த விஷாலுக்கு ஆக்‌ஷன் முத்திரையை ஆழமாகக் குத்தியது லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி'.

விஷாலுடன், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து இருந்தனர்.  முன்பு ' சண்டக்கோழி' திரைப்படம் வெளியானபோது பெரிதாகப் பேசவும் செய்தது, வசூலையும் வாரிக்குவித்தது. அதன்பின் அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு விஷால், லிங்குசாமி இருவரும் விரும்பினாலும் விஷால் நடிப்பிலும், லிங்குசமி திரைப்படங்களைத் தயாரிக்கும் வேலையிலும் பிஸியாகி விட்டதால் இரண்டாம் பாகத்தை எடுக்காமல் தவிர்த்து வந்தனர்.

vishal

ஒருமுறை விஷாலை வீடியோ பேட்டி எடுக்க அவரது அலுவலகத்தில் சந்தித்தோம் அப்போது 'உங்களுக்கு  'சண்டக்கோழி' என்கிற பெரிய ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் லிங்குசாமியை நீங்கள் கண்டுக்கொள்ளவே இல்லையே?" என்ற கேள்வியை அவரிடம் கேட்டோம். ''நானும், லிங்குசாமியும் கண்டிப்பாக மீண்டும் இணைவோம், 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகத்தை என்னுடைய விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும்" என்று பதில் அளித்தார்.

இப்போது 'சண்டக்கோழி-2'  படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகள் தயாராகி விட்டன. ஏற்கெனவே வெளிவந்த முதல்பாகம் மதுரை பின்புலமாக அமைந்தது. இப்போது இரண்டாம் பாகத்திலும் அதுவே தொடர்வதால் மதுரை மாதிரியே அச்சு அசலாக  பிரமாண்ட செட் பின்னிமில்லில் போடுவதற்காக சமீபத்தில் பூஜை போடப்பட்டு, தற்போது செட் ரெடியாக இருக்கிறது.

முதல்பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்து இருந்தார். இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். 'சண்டக்கோழி-2' படத்தை லிங்குசாமியும், விஷாலும் இணைந்து தயாரிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை முதல்பாகத்தைக் காட்டிலும் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துயிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி என்று புகழாரம் சூட்டுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!