நிஜ Never Ever Give Up ஹீரோ தோனி! | MS Dhoni's Comeback story

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (28/08/2017)

கடைசி தொடர்பு:18:03 (28/08/2017)

நிஜ Never Ever Give Up ஹீரோ தோனி!

`வயதாகிவிட்டது. இனி கிரிக்கெட் ஆட முடியாது. இளைய சமுதாயத்துக்கு வழியைவிட்டு அவர் ஒதுங்கவேண்டியதுதானே?' இதுபோன்ற கேள்விகளுக்கு, தனக்கே உரிய பாணியில் கூலாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் தோனி. இலங்கையில் தற்போது இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது. முதலில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் 3 -௦ என்ற கணக்கில் அபார வெற்றிபெற்றது. தற்போது  ஐந்து போட்டிகள்கொண்ட  ஒருநாள் தொடரையும் 3 -௦ எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
 
தோனி
 
ஒருநாள் தொடர் தொடங்கும் முன், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன்  கோலி, ``இதுபோன்ற தொடர் மூலம் 2019-ம் ஆண்டு நடக்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்கு,  மையமான அணியைத் தேர்வுசெய்ய பயன்படுத்திக்கொள்வோம்'' என்றார். இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் பேசுகையில், ``இந்தியாவின் மூத்த வீரர்களான தோனி மற்றும் யுவராஜின் கிரிக்கெட் எதிர்காலத்தை பி.சி.சி.ஐ-தான் முடிவுசெய்ய வேண்டும்'' என்றார்.
 
இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் MSK பிரசாத், அணி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அளித்த பேட்டியில், ``இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது பங்களிப்பை அணிக்கு அளிக்காவிட்டால், அவருக்கு மாற்று வீரர் தேர்வுசெய்யப்படும்" என்றார்.
 
முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கம்பிர், ``தோனி, தான் நினைக்கும் வரையெல்லாம் விளையாட முடியாது. கடந்தகால சாதனைகளை வைத்து அணியில் நீடிக்க முடியாது" எனச் சாடினார்..
 
இவ்வாறு பல்வேறு நபர்களிடமிருந்து வெவ்வேறு கோணங்களில்  விமர்சனங்கள் வந்தபோதிலும், அந்த அனைத்து கேள்விகளுக்கும் தனக்கே உரிய பாணியில் பதில் அளித்துவருகிறார் தோனி.
தோனி
 
இலங்கைக்கு எதிரான இந்தத் தொடர், அவரது கிரிக்கெட் எதிர்காலத்துக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதால் தோனி பேட்டிங்கில் தனது பங்களிப்பைத் தர வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால், இரண்டாம் ஒருநாள் போட்டியோ இந்திய அணிக்கு பெரிய பாடத்தைக் கற்பித்தது. டி.எல்.எஸ் முறையில் 231 ரன்கள் தேவை என ஆடிய இந்திய அணி, 109/0 என்ற நிலையிலிருந்து 131/7 எனத் தடுமாறியது. அப்போது புவனேஷ் குமாருடன் ஜோடி சேர்ந்த தோனி, தனது அனுபவத்தையும் பொறுமையையும் ஒருசேர வெளிப்படுத்தினார்.  அடுத்து விக்கெட்  இழப்பின்றி இந்திய அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டுசென்றது அந்த ஜோடி. போட்டி முடிந்த பிறகு பேசிய புவனேஷ் குமார், ``தோனி என்னிடம் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தச் சொன்னார். `நாம் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தாலே வெற்றி நம் பக்கம். நீ டெஸ்ட் ஆடுவதுபோல் பொறுமையாக விளையாடு. உன்னை நீயே நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொள்ளாதே' என்று தோனி என்னிடம் கூறினார்’’ என்றார். இதுபோன்ற சூழ்நிலைகளில் `பேட்ஸ்மேன்  தோனி'யைவிட  `அணியின் வீரர் தோனி'யே தேவைப்படுகிறார் என்பதே பல கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்து.
 
விமர்சகர் ஹர்ஷா போக்ளே, ``இந்திய அணியில் தோனியின் இருப்புதான்  பெரிய பலமாக உள்ளது" என்று கூறியுள்ளார் . இதை, நேற்று நடந்த  மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தோனி நிரூபித்துள்ளார். 218 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி, 61/4 எனத் திணறியது. அப்போது ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த தோனி, தனது  65-வது அரை சதம் அடித்ததுடன் இந்திய அணி தொடரை வெல்லவும் வழிவகுத்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா, இலங்கை மண்ணில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார்.
 
தோனி
இந்தத் தொடரின் மூலம் தோனி பல சாதனைகளைப் புரிந்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 99 ஸ்டம்ப்பிங் செய்து சங்ககாராவின் உலக சாதனையை சமன்செய்துள்ளார். ரன் சேஸிங்கில் அதிகமுறை (40 முறை ) அவுட் ஆகாமல் களத்தில் இருந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தன் 65 அரை சதத்தில் இலங்கை அணியிடம் மட்டும் 18 அரை சதம் அடித்துள்ளார். ஒரே அணியிடம் அடிக்கப்பட்ட அதிக அரை சதம் என்ற சாதனையை சமன்செய்துள்ளார். இதே சாதனையை, சங்ககாரா இந்தியாவிடம் நிகழ்த்தியுள்ளார். நேற்றைய போட்டியின் மூலம் `இந்திய  வீரர்களில் 4-வது  அதிக ரன்களை (9,434 ரன்கள் ) அடித்த வீரர்' என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அஷாருதீன் சாதனையை முறியடித்து, தோனி நேற்று 4-வது இடத்துக்கு ஏறினார். சச்சின், கங்குலி, டிராவிட் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
 
முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறுகையில், ``இந்திய அணியில் 2019-ம்  ஆண்டு உலகக்கோப்பை வரை தோனிக்கு மாற்று வீரரே கிடையாது. அவர் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.

தோனி 

தோனி ஓய்வுபெற வேண்டும் என்று சிலர் கூறிவரும் நேரத்தில், புதுப்புது சாதனைகளை நிகழ்த்தி, அவ்வாறு கூறியவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவருகிறார் தோனி. ``வேட்டைமன்னன் தோனி களத்தில் நுழைந்தால், பெளலர்களுக்கு கண்கலங்கும் நிலை தற்போது இல்லை என்பது உண்மையே என்றாலும், இன்னும் தன்னிடம் மீதமுள்ள கிரிக்கெட்டை இந்திய அணிக்கு அளிக்கும் வரை எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் பீனிக்ஸ்  பறவையைப்போல மீண்டும் மீண்டும் தோனி எழுந்துவருவார்" என ரசிகர்கள் பெருமிதம்கொள்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்