வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (28/08/2017)

கடைசி தொடர்பு:18:49 (28/08/2017)

'எது இனி என் அணி..?' - குழம்பிப் புலம்பும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் #HallOfShameADMK

அ.தி.மு.க எடப்பாடி அணி ஆலோசனை

தமிழகத்தில் தற்போது நிலவும் உச்சக்கட்ட அரசியல் குழப்பத்தால் எந்த அணிக்குப் போவது என்று தெரியாமல் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பலரும் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். டி.டி.வி. தினகரன் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால் ஏ.கே.போஸ் போன்ற பல எம்.எல்.ஏ-க்கள் எந்த அணிக்குச் செல்வது என்பது தெரியாமல் திணறி வருகிறார்கள்.

முதல்வர் பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி இருக்கும் டி.டி.வி. தினகரன், நாளுக்குநாள் தனது முகாமை வலுவாக்கி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் கட்சிப்பதவி பறிப்பு உள்பட டி.டி.வி. தினகரனின் அதிரடி நடவடிக்கைகளால் எடப்பாடி அணி கதிகலங்கிப் போயிருக்கிறது. துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனை நியமித்ததே செல்லாது என்றும், எனவே தங்களை நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் சொல்லிவந்த நிலையில், இன்றுகூடிய அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கூட்டத்தில், 'டி.டி.வி.தினகரன் எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் செல்லாது' என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். மேலும், 'பொதுக்குழுவை கூட்டுவது, ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ்களை கைப்பற்றுவது, சசிகலா, தினகரனை ஒதுக்கி வைப்பது' என்றும் தீர்மானம் போட்டுள்ளனர்.

இதுகுறித்து, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், 'பொதுக்குழு கூட்டம் குறித்து தீர்மானம் போட்டோம். 'நமது எம்ஜிஆர்.' நாளிதழ் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. எனவே, நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி ஆகியவற்றை சட்டப்படி மீட்க நடவடிக்கை எடுப்போம். இன்றையக் கூட்டத்தில் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். முதல்வர் பழனிசாமியை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது நகைச்சுவையாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ டி.டி.வி. தினகரன் நீக்கியதாக தொலைக்காட்சிகளில் முக்கியச் செய்திகளில், செய்தி வந்தாலும் வரும். அந்த அளவுக்கு அவரது நடவடிக்கை காமெடியாக உள்ளது. தினகரனுக்குப் புத்தி பேதலித்து விட்டதால் விபரீதமான எண்ணங்கள் தோன்றுகிறது. விநாசகால விபரீத புத்தி கொண்ட தினகரனுக்கு அழிவுகாலம் தொடங்கி விட்டது'' என்றார்.

அ.தி.மு.க. தினகரன்

இதற்குப் பதிலடியாக, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், ''ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆகிய இரண்டும் தனியார் சொத்துக்கள். அங்கு அவர்கள் வந்து பார்க்கட்டும். தனியார் சொத்தை யார் வேண்டுமானாலும் கைப்பற்றிவிட முடியுமா? சராசரி மனிதனுக்கு இருக்கக் கூடிய அறிவுகூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அவர் 420 என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். 19 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மெஜாரிட்டி பலம் இல்லாத எடப்பாடி, தனது பதவியை உடனே ராஜினாமா செய்திருக்க வேண்டும். பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரால் நியமிக்கப்பட்ட அனைத்து நியமனங்களும் செல்லும். புதிய நிர்வாகிகள், தங்கள் பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல; எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். எல்லா விவரமும் தெரிந்த ஆளுநர், விரைவில் நல்ல முடிவை எடுப்பார். தேர்தல் வைத்தால் துரோகிகள் தோற்பார்கள்; தர்மம் ஜெயிக்கும்'' என்றார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை ஆதரிக்கும் 113 எம்.எல்.ஏ-க்களில் ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்த இன்றைய கூட்டத்துக்கு 30 எம்.எல்.ஏ- க்கள் வரவில்லை. அதாவது, எடப்பாடி அரசை ஆதரிப்பதாகச் சொல்லப்படும் 113 எம்.எல்.ஏ-க்களில் 83 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாகக் கூறுகிறார்கள். அப்படியென்றால், ஏற்கனவே, தினகரன் அணியில் இருக்கும் 21 எம்.எல்.ஏ-க்களுடன் இந்த 30 எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்தால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 51 ஆகிவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இப்போதைய அரசியல் குழப்பத்தால், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவருமே எந்த அணிக்குப் போவது, யாரை ஆதரிப்பது என்ற பெருங்குழப்பத்தில் உள்ளனர். இந்த ஆட்சி நிலைக்குமா? தேர்தல் வந்தால் மீண்டும் ஜெயிக்க முடியுமா? என்றெல்லாம் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இப்போதே கணக்குப்போட ஆரம்பித்துவிட்டனர்.

"இதேபோன்று மோதல் தொடருமானால், விரைவில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது" என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், 'டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் 21 எம்.எல்.ஏ-க்களையும் பதவி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை' என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வழக்கை மேற்கோள்காட்டி அ.தி.மு.க-வில் பேச்சு உலவுகிறது. எனவே, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்ல; அனைத்து எம்.எல்.ஏ-க்களுமே அடுத்து என்ன நடக்குமோ என்ற 'திக்.. திக்..' மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்