’புஷ்கர நாளில் எல்லா உலக நன்மைகளும் கிடைக்கும்!’ - பேரூர் ஆதீனம் | Perur Adheenam visits maha pushkaram at mayiladuthurai

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (28/08/2017)

கடைசி தொடர்பு:19:30 (28/08/2017)

’புஷ்கர நாளில் எல்லா உலக நன்மைகளும் கிடைக்கும்!’ - பேரூர் ஆதீனம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி நதிக்கரையில் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 12 நாள்கள் வெகுசிறப்பாக மஹாபுஷ்கர திருவிழா நடைபெறவுள்ளது.

சிட்டி யூனியன் வங்கி ரூ.50 லட்சம் மற்றும் மயிலாடுதுறை எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 1 கோடியே 50 லட்சம் என, மொத்தம் 2 கோடி ரூபாய் செலவில் காவிரி துலாக்கட்டத்தில் நிரந்தர நீர்த்தேக்கம் கட்டும்பணி முனைப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்பாராத ஆன்மீக அதிர்ச்சியாக 11 புனித கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அவற்றைப் புணரமைத்து ஒவ்வொன்றுக்கும் புனித நதிகளின் பெயர்சூட்டி தீர்த்தங்களாகப் பயன்படுத்தப்பட இருக்கிறது.  

இந்நிலையில், இன்று  மயிலாடுதுறைக்கு வருகைதந்த சீர்வளர்சீர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் புஷ்கர பணிகளை பார்வையிட்டார். புஷ்கர துவக்கநாளன்று அகில பாரதிய துறவியர்கள் சங்கம மாநாடு நடைபெறுவதையொட்டி விழா அழைப்பிதழ்களை வெளியிட்டார்.  

அவரிடம் பேசுகையில், ''64 சித்தர்கள் வாழ்ந்த பெருமைக்குரிய மயிலாடுதுறையில் 7 கோடி நதிகளில் அகஸ்திய முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட புண்ணிய நதியான காவிரியில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு, மஹாபுஷ்கரம் என்னும் உன்னதமான விழா நடைபெற இருக்கிறது. அந்நாளில் புனித நதிகளெல்லாம் காவிரியில் சங்கமமாகிறது.

எனவே, புஷ்கர நாளில் காவிரியில் நீராடினால் அனைத்து புனித நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி, குடும்ப வாழ்க்கை, மழைப்பொழிவு, வன்முறை அகன்று அமைதி நிலவுதல் என எல்லா உலக நன்மைகளும் கிடைக்கும். மேலும், சங்கராச்சாரியார் முதல் அனைத்து ஆதீனங்கள் மற்றும் துறவியர்கள் மயிலாடுதுறை வருகைதர இருப்பதால் ஒரே நேரத்தில் அனைவரையும் தரிசிக்கவும், அவர்களிடத்தில் ஆசிகள் பெறவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

12 நாள்களும் வேதபாராயணங்கள், வேள்விகள், பித்ரு தர்ப்பணங்கள், விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதா சகஸ்ர நாமம், திருமுறைகள், திவ்ய பிரபந்தங்கள், தமிழ் வேதாந்த வகுப்புகள், கம்பராமாயண சொற்பொழிவுகள், ஆன்மீக கலைநிகழ்ச்சிகள், அன்னை காவிரிக்கு ஆரத்தி வழிபாடுகள் நடைபெறவுள்ளது. எனவே, பக்தர்கள் தவறாது கலந்துகொண்டு புனிதநீராடி எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ ஆசீர்வதிக்கிறேன்’’ என்றார்.  

 


[X] Close

[X] Close