வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (28/08/2017)

கடைசி தொடர்பு:18:45 (28/08/2017)

'தமிழக ஆளுநர் சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்!' - ம.ம.க கோரிக்கை! 

அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் தீராத நிலையில், எதிர்க்கட்சிகள் 'உடனடியாக தமிழக சட்டப்பேரவை கூட்டப்பட்டு பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடப்பட வேண்டும்' என்று வலியுறுத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை முன் வைத்து மனிதநேய மக்கள் கட்சியும் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஜவாஹிருல்லா


 
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக அரசியலில் தினமும் நடைபெற்றுவரும் மாற்றங்களினாலும், ஆட்சியையும், கட்சியையும் தக்கவைக்க நடக்கும் பேரங்களாலும், தொடர்ந்து தமிழக மக்கள் வேதனை அனுபவித்து வருகின்றனர். தமிழகத்தில் நிலவிவரும் குடிநீர்ப் பிரச்னை, காவிரிப் பிரச்னை, டெங்கு காய்ச்சல் போன்ற பிரச்னைகளாலும் தமிழக மக்கள் நிலையற்ற அரசின் காரணமாக தொடர்ந்து வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழக அரசுக்கு தமது ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறி டி.டி.வி.தினகரன் அணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் தமிழக ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இந்த ஆதரவு வாபஸ் கடிதத்தினால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. பெருபான்மையை இழந்த அரசு ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைக்க தொடர்ந்து பேரம் நடத்தி வருகின்றனர். 
 
அ.தி.மு.க-வில் நடக்கும் அரசியல் போட்டியின் காரணமாக அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதுபோன்ற இக்கட்டான சூழலில், தடை செய்யப்பட்ட குட்கா என்ற போதைப் பொருள்களை சட்டமன்றப் பேரவைக்குள் கொண்டுவந்தனர் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 20 தி.மு.க உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டி உரிமை மீறல் பிரச்னையை எழுப்ப தமிழக அரசு முயன்று வருவது கண்டிக்கத்தக்கது.
 
ஏற்கெனவே பெருபான்மையை இழந்த எடப்பாடி அரசு தி.மு.க-வுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னையை எழுப்ப துளியளவும் அதிகாரம் இல்லை. சம்பவம் நடந்து முடிந்து ஒரு மாதத்துக்கு மேலான பிறகு, தற்போது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், தி.மு.க உறுப்பினர்களை உரிமை மீறல் என்ற போர்வையில் அவர்களை முடக்க நினைப்பது ஏற்கத்தக்கதல்ல.
 
தமிழக ஆளுநர் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக சட்டமன்றப் பேரவையைக் கூட்டவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெருபான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.