Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆளுநர் தாமதிக்கும் ஒவ்வொரு மணி நேரமும்... எச்சரிக்கும் ராமதாஸ்

தமிழகத்தில் நிலவும் அரசியல் அவலங்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதில் ஆளுநரும் அலட்சியம் காட்டுவது கவலையளிக்கிறது என்று கூறியுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றப்பட்டு வரும் அரசியல் அவலங்கள் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் தலைகுனிய வைத்திருக்கின்றன. அரசியல் குழப்பங்களால் அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், அதைப் பற்றிய கவலை சிறிதளவும் இல்லாமல் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும் அதிகாரத்தைப் பிடிக்கவும் அடித்துக்கொள்வது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் இப்போது நிகழும் அரசியல் போட்டிகளுக்கு அடிப்படை மக்கள் நலனோ சமூக நலனோ அல்லது அரசியல் புனிதமோ அல்ல. பதவிகளும் பதவி சார்ந்த கொள்ளைகளும்தான். அவலங்களின் ஆதாரமாக விளங்கும் அ.தி.மு.க-வின் மூன்று அணிகளில் உள்ளவர்களுமே புனிதர்கள் அல்லர். பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினரும், ஊழல் உத்தமர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் என்ன காரணங்களுக்காக இணைந்தனரோ அதே காரணத்துக்காகத்தான் தினகரன் தலைமையிலான அணியினரும் பழனிசாமிக்கான ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர்.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் கொள்ளையடித்து பணம் சேர்க்க முடியவில்லை என்பதால்தான், இழந்ததைப் பிடிக்கும் நோக்குடன் இரு அணிகளும் இணைந்தன. இரு அணிகளும் இணைந்ததால் தங்களுக்குக் கிடைத்து வந்தவை கிடைக்காமல் போனதைச் சகித்துக் கொள்ள முடியாமல்தான் இப்போது இன்னொரு அணி போர்க்கொடி உயர்த்தி, புதுவையில் முகாமிட்டிருக்கிறது. இந்த 3 மட்டைகளுமே ஒரே குட்டையில் ஊறி நாற்றமெடுத்தவைதான். இவர்களில் யாருக்கும் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்தோ தமிழக மக்களின் நலன் குறித்தோ எந்த அக்கறையும் இல்லை என்பதுதான் உண்மை. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது முதலே ஜெயலலிதாவின் உடல்நிலை காரணமாக அரசு நிர்வாகம் முடங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்தே பன்னீர்செல்வம் தலைமையிலான அணியைச் சமாளிப்பதும், அந்த அணி இணைந்த பின்னர் தினகரன் அணியினரின் நெருக்கடிகளைச் சமாளிப்பதும்தான் முழுநேர பணியாக உள்ளது. இதனால் அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கி கோமாநிலையில் கிடக்கிறது. தமிழகத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்த பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் ஆந்திராவுக்கும், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வெளியேறிச் சென்றுகொண்டிருக்கின்றன. காவிரி, நீட் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மாநில அரசு இதை வேடிக்கை பார்க்கிறது.

வறட்சி, விலை உயர்வு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் தமிழக மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், மக்களின் குறைகளை களைய வேண்டிய ஆட்சியாளர்களோ எதிரணியிலிருந்து உறுப்பினர்களை இழுப்பது எப்படி என்பது குறித்தும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் என்ன கதையைச் சொல்லலாம் என்பது குறித்தும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். தங்களின் குறைகளைக் களைய வேண்டிய அரசு, பொறுப்பில்லாமல் ஊழல் செய்வதிலும், பதவிகளைக் காப்பாற்றிக்கொள்வதிலும் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத மக்கள், "இந்த மக்கள் விரோத அரசு போய்த் தொலையாதா’’ என மனதுக்குள் புழுங்குகின்றனர். 1991-96 ஜெயலலிதா ஆட்சிக் காலத்துக்குப் பிறகு, இப்போதுதான் மக்கள் மனதில் ஆட்சியாளர்கள் மீது தமிழ்நாட்டு மக்களிடையே இந்த அளவுக்கு கடுமையான அதிருப்தியும் கோபமும் நிலவுகிறது.

இத்தகையச் சூழலில் தமிழகத்தில் நிலவும் அரசியல் அவலங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதில் ஆளுநரும் அலட்சியம் காட்டுவது கவலையளிக்கிறது. எடப்பாடி தலைமையிலான அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடிதம் கொடுத்து ஒரு வாரமாகியும் அதன் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காததுதான் அரசியல் குழப்பங்கள் நீடிப்பதற்கு காரணமாகும். இவ்விஷயத்தில்  நடவடிக்கை எடுப்பதில் ஆளுநர் தாமதம் செய்யும் ஒவ்வொரு மணி நேரமும் குதிரை பேரம் தீவிரமடையும், புதுப்புது கூத்துகள் அரங்கேறும். அரசியலின் தரம் தாழ்ந்துகொண்டே செல்லும். இது தமிழகத்துக்கு எவ்வகையிலும் நன்மை பயக்காது. எனவே, தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆணையிட வேண்டும். யாருக்கும் பெரும்பான்மை இல்லையென்றால் தமிழக அரசைக் கலைப்பதுகூட தவறில்லை" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement