''வெயில்தான் சாமி... மூங்கில்தான் குலதெய்வம்'' - நடைபாதை மூங்கில் தொழிலாளி அச்சம்மா | This couple sells bamboo crafts for many years!

வெளியிடப்பட்ட நேரம்: 01:26 (29/08/2017)

கடைசி தொடர்பு:01:26 (29/08/2017)

''வெயில்தான் சாமி... மூங்கில்தான் குலதெய்வம்'' - நடைபாதை மூங்கில் தொழிலாளி அச்சம்மா

சென்னை வடபழனி... மதியம் இரண்டு முப்பது மணிக்குக்கூட பரபரப்போடுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. கோயம்பேடு வரை ஒரு வேலையாக நானும் புகைப்படக்காரரும் டூவீலரில் சென்றுகொண்டிருந்தபோது வெயிலோடு ட்ராஃபிக்கும் நம்மை வாட்டி வதைத்தது. 'இந்த மதிய வேளையிலும் இப்படியா ட்ராஃபிக் இருக்கணும்' என்று நாங்கள் கொதித்துப்போக சட்டென அந்த வழியிலுள்ள நடைபாதையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் எங்கள் கவனத்தை ஈர்த்தார்கள். ட்ராஃபிக், வெயில், பரபரப்பு என இவை எதையும் பொருட்படுத்தாமல் கூலாக உட்கார்ந்து மூங்கில் திரை பின்னிக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும் நம் புகைப்படக்காரர் டூவீலரை அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கித் திருப்பினார். 

மூங்கில் தொழிலாளர்கள்

“என்னக்கா இப்புடி வேர்வ சொட்டச் சொட்ட இந்த வெயில்ல உட்கார்ந்து வேலை பார்க்கணுமா? வேற நிழலான இடம் ஏதும் இல்லையா” என்று கேட்க, “தம்பி கொஞ்சம் அப்புடி போய் நில்லுப்பா. வேலை செஞ்சிக்கிட்டு இருக்கும்போது குறுக்க பேசாத” என்றார் அவர்களில் ஒருவர். அதற்குள்ளாகவே நமது புகைப்படக்காரர் கேமராவை எடுத்து அவர்களைப் படம் பிடிக்க, “என்னப்பா பத்திரிகையில இருந்து வர்றீங்களா? தப்பா நெனைச்சுக்காதிங்க தம்பி. நான் கொஞ்சம் கோவமா பேசிட்டேன் அத மனசுல வெச்சிக்க வேணாம்” என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்து பேச ஆரம்பித்தார். 

“இந்த மூங்கில பின்னும்போது மட்டும் அங்க இங்கன்னு கவனம் திரும்பக்கூடாதுப்பா. கொஞ்சம் கவனம் மாறுனாலும் மூங்கிலோட கூரு கைய அறுத்துடும். நீங்க வந்ததும் உங்ககிட்ட பேசுனேன்னா எனக்கு மட்டும் இல்லாம கூடஉக்காந்து பின்னுற இந்தப் புள்ளைக்கும் கைய அறுத்துப்போடும். அதான் பேசாம அப்புடி போய் நில்லுன்னு சொன்னேன்” என்று தனக்கு மட்டுமில்லாமல், தன்னுடன் வேலை பார்ப்பவர் மீதும் அக்கறை எடுத்துக் கொண்டார் அவர். 

“என் பேரு அச்சம்மா. வீடு எம்.எம்.டி.ஏ பக்கத்துல இருக்கு. அதோ, அந்தா உக்காந்து மூங்கில் உரிக்குறாருல்ல அவருதான் என் வீட்டுக்காரரு. பேரு ரவி. அவரு பத்து வயசுல இருந்தே இந்த வேலையத்தான் செஞ்சுக்கிட்டு இருக்காரு. நான் பெரிய மனுஷியா ஆனதுல இருந்து செய்ய ஆரம்பிச்சேன். இப்போ முப்பது வருசமாகுது. கல்யாணத்துக்கு அப்பறமும் அவரோட சேர்ந்து இந்த வேலைய செய்ய ஆரம்பிச்சிட்டேன். 

மூங்கில்

முன்னெல்லாம் நாங்க தயாரிக்குற இந்தப் பொருட்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்துச்சுயா. ஆனா, இப்ப உள்ள பசங்க யாருப்பா மூங்கில்ல செய்யுற பொருட்களை வாங்கி வைக்குறாங்க. எல்லாருமே பிளாஸ்டிக்க நோக்கி நகர ஆரம்பிச்சிட்டாங்க. உடம்புக்கு குளிர்ச்சிய தர்ற இந்த மூங்கிலை அப்படியே மறந்துட்டாங்க. என் வீட்டுக்காரரு தெனமும் உக்காந்து மூங்கில் உரிக்குறாரு. காலைல 9 மணிக்கு வேலைக்கு வந்தா சாயங்காலம் 6 மணி வரை வேலை பாக்கணும். வீட்டுக்குப் போகும்போது கையெல்லாம் ரத்தக் கோரையா இருக்கும். ஆனாலும், வயசான காலத்துல அவர தனியா அனுப்ப மனசு வரல. அதான் நானும் அவரு கூடவே வந்துடுறேன். அவருக்கு 300 ரூபாயும் எனக்கு 200 ரூபாயும் சம்பளம் கிடைக்கும். 200 ரூபாய்னாலும் அவருக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்ல. இதெல்லாம் வெயில் காலம் வரைக்கும்தான். மழைக்காலத்துல பொழப்பே இருக்காது. எங்களப் பொறுத்தவரைக்கும் வெயில்காலம்தான் சாமி... மூங்கில்தான் குலதெய்வம்” என்றார் அச்சம்மா

கணவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வயதான காலத்திலும் அவரோடு சேர்ந்து நடைபாதை ஓரங்களில் உட்கார்ந்து மூங்கில் பொருட்களை தயார் செய்து வருகிறார் அச்சம்மா. இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் இவர்கள் தன் மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்ற நினைப்பில் இருவரும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது கர்வமாக இருந்தது. அவர்களோடு வேலை பார்க்கும் மற்றொரு பெண்ணிடம் பேசினோம். 

நடைபாதை தொழிலாளர்கள்

“எம்பேரு ரூபாவதி. நான் எட்டாவது வரை படிச்சிருக்கேங்க. குடும்ப கஷ்டத்தால இந்த வேலைக்கு வந்துட்டேன். ஆரம்பத்துல மூங்கில்ல கூடை பின்னுறது, விசிறி செய்யுறது, பாய் நெய்யுறதுன்னு நிறைய செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஆனா, காலம் மாற மாற எல்லாரும் இத மறந்துட்டாங்க. அதனால, எங்க தொழிலும் முடங்கிடுச்சு. இதோ, எப்பவாச்சும் மூங்கில்ல ஸ்க்ரீன் பின்னிக்கொடுக்கச் சொல்லி ஆர்டரு வரும். அப்போ மட்டும் வந்து செஞ்சிக் கொடுப்பேன். ஏன்னா, இந்த ஸ்க்ரீன ஒருத்தரால பிண்ண முடியாது. ரெண்டு பேரு சேர்ந்துதான் செய்ய முடியும். அதுமட்டுமில்லாம, இது விசேஷ காலம்ங்கிறதுனால கொஞ்சம் கூடுதலா ஆர்டர் கெடைக்கும். நான் இங்க உக்காந்து வேல பாக்குற மாதிரி என் வீட்டாளு பிராட்வேயாண்ட உக்காந்து மூங்கில் உரிச்சுக் கொடுக்குறாரு. நாங்க ரெண்டு பேரும் ஆளும்பேருமா சேந்து வேல பாக்குறதுனாலதான் என் ரெண்டு பொண்ணுங்களும் ஸ்கூல் போய் படிக்குதுங்க”  

சொல்லிக்கொண்டே அச்சம்மாவோடு சேர்ந்து மாறி மாறி மூங்கிலில் கயிறைப் பிண்ணிக் கொண்டிருந்தார் ரூபாவதி. சிறிது நேரத்தில் குச்சிகளாகக் கிடந்த மூங்கில் முழுமையான வடிவத்திற்கு வந்தன. ஆனால், இருநூறுக்கும் முந்நூறுக்கும் நடைபாதையில் உச்சி வெயிலில் கிடந்து உழலும் இவர்கள் வாழ்க்கை இன்னும் வடிவம் பெறாதது நினைத்து வருத்தத்தோடுதான் அங்கிருந்து கிளம்பினோம். 


டிரெண்டிங் @ விகடன்