வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (28/08/2017)

கடைசி தொடர்பு:20:09 (28/08/2017)

'பதற வைக்கும் புழல் சிறை தற்கொலை!' -ஆர்.டி.ஐ.யில் அம்பலம்

புழல் சிறை

புழல் சிறைச்சாலையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதுவரை 18 பேர் தற்கொலை செய்துள்ளதாக ஆர்.டி.ஐ.யில் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சென்ட்ரல் பகுதியில் செயல்பட்டு வந்த சிறைச்சாலையில் இடநெருக்கடி ஏற்பட்டதால்  திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் ஆசியாவிலேயே பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது. இது, 2006-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. இந்தச் சிறைச்சாலையில் தொடர்ந்து கைதிகள் தற்கொலை சம்பவங்கள் நடந்தன.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இன்ஜினீயர் சுவாதி வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் கைதுசெய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர், கடந்த 18.9.2016ல்  மின்வயரைக் கடித்து தற்கொலை செய்தார்.  புழல் சிறையில் தற்கொலை செய்த கைதிகளின் விவரத்தை நெல்லை மாவட்டம், வி.எம்.சத்திரம், வ.உ.சி. நகரைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. போராளி, வழக்கறிஞர் பிரம்மா, ஆர்.டி.ஐ. மூலம் தமிழக சிறைத்துறை நிர்வாகத்திடம் கேள்விகளை கேட்டிருந்தார். இந்தக் கேள்விக்கு புழல் மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளரான பொது தகவல் அலுவலர் பதிலளித்துள்ளார். அதில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சிறைக் கைதிகளின் மரணம், தற்கொலை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில் "கடந்த 25.5.2017ல் தமிழக சிறையில் மரணமடைந்த கைதிகளின் விவரங்களை ஆர்.டி.ஐ. மூலம் கேட்டிருந்தேன். என்னுடைய கேள்விகளுக்கு சிறை நிர்வாகம் பதிலளிக்கவில்லை. இதனால் மேல்முறையீடு செய்தேன். அதன்பிறகு சிறை நிர்வாகம், ஒவ்வொரு கேள்விகளுக்கும் தனித்தனியாக பதிலளித்து வருகிறது. கடந்த 23.8.2017ல் புழல் மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் அனுப்பிய பதிலில் 2010-ம் ஆண்டு 10 கைதிகளும், 2011ல் 5 பேரும், 2012ல் 11 பேரும், 2013ல் 13 பேரும், 2014ல் 11 பேரும், 2015ல் 6 பேரும் 2016ல் 9 பேரும், 2017 ஜூன் மாதம் வரை 6 பேரும் இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2006 முதல் 2017 வரை 18 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் ராம்குமாரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 53 பேர் இறந்துள்ளனர். அதில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு  4 பேர்  மரணமடைந்துள்ளனர். இன்னும் சில கைதிகள் குடியை நிறுத்தியதால் மரணமடைந்தாகவும் பதிலளிக்கப்பட்டுள்ளது. 2017 ஜூன் மாதம் வரை மட்டுமே விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்பிறகும் தொடர்ந்து கைதிகள் மரணம் புழல் சிறையில் மட்டுமல்ல.. தமிழகம் முழுவதும் உள்ள சிறையில் நடந்துள்ளன. அதன்படி பார்த்தால் சிறையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சிறை வளாகம் என்பது கைதிகளைத் திருத்த வேண்டிய இடமாகவே கருதப்படுகிறது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துவருவது தொடர்கதையாக உள்ளது. எனவே, கைதிகளுக்குத் தேவையான கவுன்சலிங் அளிக்கப்பட வேண்டும்" என்றார்.  

புழல் சிறையில் இரண்டு கைதிகள் மரணம் 

 சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். நாகராஜ் மீது, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் நாகராஜிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

அதுபோல், செங்கல்பட்டைச் சேர்ந்தவர் முருகேசன். அவர், திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நெஞ்சுவலியால் துடித்த முருகேசன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முருகேசன் இறந்தார். ஒரே நாளில் இரண்டு விசாரணைக் கைதிகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்