'சசிகலா நீக்கம் குறித்து பேசவில்லை' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | No discussion about sasikala's expel, says Minister Rajendra Balaji

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (28/08/2017)

கடைசி தொடர்பு:20:15 (28/08/2017)

'சசிகலா நீக்கம் குறித்து பேசவில்லை' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க-விலிருந்து சசிகலாவை நீக்குவது குறித்து பேசவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், விரைவில் பொதுக்குழுவைக் கூட்டுதல், ஜெயா டிவி மற்றும் டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழை மீட்பது உள்ளிட்ட 4 நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்தநிலையில் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘உள்கட்சித் தேர்தலை எதிர்கொண்டு நாங்கள் கட்சிப் பதவி வகித்து வருகிறோம். மேலும், பொதுச்செயலாளர் விவகாரம் தேர்தல் ஆணைய விசாரணையில் இருக்கிறது. இந்தநிலையில், கட்சியிலிருந்து நிர்வாகிகளை நீக்குவதாக தினகரன் அவசரப்பட்டு அறிவித்து வருகிறார். நிர்வாகிகளை நீக்குவதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. அதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். அதனால், தினகரன் தற்போது எடுத்து வரும் முடிவுகள் செல்லாது. அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளராக நான் தற்போதும் நீடித்து வருகிறேன். தினகரன், தன்னுடைய பயத்தால் இதுபோன்ற முடிவுகளை எடுத்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை நீக்குவது குறித்து பேசவில்லை’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.