தினகரன் அறையில் பணிகளைத் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம்! #HallOfShameADMK

admk, அதிமுக

கேரள செண்டை மேள சத்தத்துக்கு இடையே கரைவேட்டிகளாலும், காக்கிச் சட்டைகளாலும் நிரம்பியிருந்தது அ.தி.மு.க தலைமைக் கழகம் அமைந்திருக்கும் லாயிட்ஸ் சாலை. 'தினகரன் மற்றும் சசிகலாவுக்கு எதிராக இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும்' என பரவியிருந்த செய்தியால், அ.தி.மு.க தொண்டர்கள் அதிக அளவில் அங்கு குவிந்திருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அ.தி.மு.க தலைமைக் கட்டடத்தை இணைக்கும் சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி என அ.தி.மு.க-வின் முக்கியத் தலைமைகளைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கி வருகிறார் தினகரன். இதற்கிடையில், அமைச்சரவையில் இருப்பவர்கள் உட்பட தினகரனால் நீக்கப்பட்டவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களிடம், “தினகரன் உங்களை நீக்கியுள்ளாரே?” என்ற கேள்வி கேட்டபோது, பதிலளிக்காமல் சிரித்துக்கொண்டே  நகர்ந்துவிட்டனர். கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏ-க்கள் பற்றிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

முதலில் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள் வெளியிடப்பட்டதும் தலைமைக் கழக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதில், 'பொதுக்குழு மற்றும் செயற்குழுவை விரைவில் கூட்ட முடிவு செய்வது. சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பது. அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட தினகரனுக்கு யாரையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கோ, நியமிப்பதற்கோ உரிமை இல்லை. சசிகலா மற்றும் தினகரனின் கட்சி நடவடிக்கைகள் செல்லாது. ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ‘நமது எம்.ஜி.ஆர்’ மற்றும் ஜெயா தொலைக்காட்சியை அ.தி.மு.க-வின் கட்சி நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும்' என்பது உட்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்கள், “இந்த நான்கு தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை”, என்ற வரியை மறக்காமல் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

admk, அதிமுக

அதேபோல் முதல் தீர்மானத்திலேயே, 'அ.தி.மு.க பொதுச் செயலாளராக, ஓர் இடைக்கால ஏற்பாடாக, வி.கே சசிகலா அவர்கள் நியமிக்கப்பட்டதையே தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில், அவரால் துணைப் பொதுச் செயலாளராக ஒருவர் நியமிக்கப்படுவதும், அப்படி நியமிக்கப்பட்டவர் கழகப் பணிகளில் ஈடுபடுவதும் கழக சட்ட திட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது. எனவே, தினகரனின் அறிவிப்புகள் செல்லத்தக்கதல்ல' எனக் குறிப்பிட்டு அதை மையப்படுத்தியே பலரும் கருத்து தெரிவித்தனர். 

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சி அலுவலகத்தை விட்டுக் கிளம்பியதும் வெளியே வந்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். செய்தியாளர்களைப் பார்த்ததும் நேராக வந்து பேசத் தொடங்கிய அவர், “அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையையும், ஜெயா டி.வி-யையும் நாங்கள் விரைவில் மீட்போம். அது தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். இன்று முத்தான, சத்தான 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. டி.டி.வி தினகரனால் நியமிக்கப்பட்ட நியமனங்களும் கட்சிப் பதவி தொடர்பான நீக்க அறிவிப்புகளும் முற்றிலும் செல்லாது. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை வழி நடத்துகிறார்கள். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதில், சசிகலா நீக்கம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும். இன்றையக் கூட்டத்தில், பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர்” எனக் கூறிவிட்டு நகர்ந்தார்.

admk, அதிமுக

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 20 பேருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும், சில எம்.எல்.ஏ-க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காததும் தெரியவந்தது. ஆனால், ‘பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்’ என சத்தியம் செய்தனர் அமைச்சர்கள். ஆலோசனைக் கூட்டம் முடிந்து சில மணி நேரத்துக்குப் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தலைமைச் செயலகத்துக்கு விரைந்தனர். அங்கு சபாநாயகர் தனபாலுடன், உரிமைக் குழு கூட்டம் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினர். மேலும், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெறுவதற்காக நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி செல்கின்றனர். 

 ஓ.பி.எஸ் - எடப்பாடி பழனிசாமி என அ.தி.மு.க-வின் இரு அணிகளின் இணைப்புக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தனது அலுவல்களை பார்ப்பதற்காக கட்சி அலுவலகத்துக்கு வந்து செல்கிறார். இதில், குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் எந்த அறையில் செயல்பட்டாரோ... அந்த அறையில்தான் தற்போது ஓ.பி.எஸ் செயல்பட்டு வருகிறார். இது அ.தி.மு.க நிர்வாகிகள் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. டி.டி.வி தினகரனின் நேரடி கண்அசைவில் ஓடியாடிய ஓ.பி.எஸ், இப்போது அவரது அறையிலேயே வீற்றிருக்கிறார். இதுதான் அரசியல் ஆட்டம்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!