வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (28/08/2017)

கடைசி தொடர்பு:20:30 (28/08/2017)

'பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை நிரந்தரமாக விடுவிக்க வேண்டும்' - இயக்குநர் கெளதமன் கோரிக்கை!

பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும்  விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார். 

director gowthaman

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கெச்சிலாபுரத்தில் நடந்த எழுத்தாளர்களுக்கான பாராட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் கெளதமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தாலும் எப்போதும் அவரைச் சுற்றி போலீஸார் சூழ்ந்தே இருப்பதால் அவர் சிறைக்குள் இருக்கும் சூழல் போன்றே காணப்படுகிறது. விரைவில் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும்  விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்கிட வேண்டுமென்ற சொல் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அது அரசியல் விளையாட்டுச் சொல்லாக இருந்துவிடாமல் நிஜமாக நடைபெற்றால் நல்லதுதான்’ என்றார். 

மேலும் அவர் கூறுகையில், ‘நெடுவாசல், கதிராமங்கலம், நீட் தேர்வு, காவிரி மேலாண்மை அமைக்காமல் இருத்தல் என தமிழக மக்களின் வாழ்வாதாரமும் உரிமைகளும் பாதிக்கப்பட்டதற்கு பா.ஜ.க அரசுதான் முழுக்காரணம். தர்ம யுத்தம், ஊழல் ஆட்சி என்றெல்லாம் மாறி மாறி பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்தது அவரவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும்தான். இவர்கள் இருவருமே பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டுத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இதை 10 கோடி மக்களும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் வரும்போது இவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க