வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (28/08/2017)

கடைசி தொடர்பு:19:03 (28/08/2017)

அ.தி.மு.க. பொதுக்குழு செப்டம்பர் 12-ம் தேதி கூடுகிறது!

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ’கட்சியின் பெருவாரியானோர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, கழக சட்டதிட்ட விதி -19 பிரிவு 7-ன் படி அ.இ.அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி காலை 10.35 மணிக்கு வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாச்சலபதி மண்டபத்தில் நடைபெறும். இந்தக் கூட்டம் கழக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் கூட்டத்துக்கான அழைப்பிதழ் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்படும். கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழுடன் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் அம்மா மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகிய இரு அணிகள் தரப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் தலைமைக் கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விரைவில் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது.