வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (28/08/2017)

கடைசி தொடர்பு:21:30 (28/08/2017)

'திருச்சி மாநகராட்சியுடன் இணைய விருப்பமில்லை’- கொதிக்கும் கிராம மக்கள்!

திருச்சி மாநகராட்சி எல்லைப்பரப்புகள் விரிவுபடுத்தப்படும் என திருச்சி மாநகராட்சி கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்தது. இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு உண்டானது.

போலீஸிடம் மல்லுக்கட்டிய பெண்கள்.

கடந்த 2010-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தும் நோக்கில், திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் டவுன் பஞ்சாயத்தின் ஒரு பகுதியை இணைத்தனர். இதற்கு எதிராக அப்போது மக்கள், போராட்டங்களையும் நடத்தினார்கள். இதற்கு எதிராக திருவெறும்பூர் டவுன் பஞ்சாயத்துக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அந்தப் பகுதிகள் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் திருவெறும்பூா் அடுத்த அரியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குளக்குடி, முல்லைகுடி, ஒட்டகுடி, சா்கார்பாளையம், பனையகுறிச்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை தற்போது திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன், சி.பி.ஐ. கட்சியின் மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாநகராட்சியின் முடிவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் என்பதால் வழக்கம்போல கோரிக்கைகளை சுமந்தபடி மக்கள் குவிந்தவண்ணம் இருக்க, திடீரென நடந்த இந்தப் போராட்டத்தால் திருச்சி கலெக்டர் அலுவலகம் பரபரப்பானது. திருச்சி போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால் பெண்கள், ’எங்கள் பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்காதவரை நாங்கள் இங்கிருந்து போகமாட்டோம்’ என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நம்மிடம் பேசிய முள்ளிக்குடியைச் சேர்ந்த சாந்தா, “ஏற்கெனவே எங்கள் ஊராட்சியில் பாதிப்பகுதியை மாநகராட்சியோடு இணைத்தார்கள். இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இன்னைக்கு வரை அப்படியேதான் இருக்கு. இந்நிலையில், மீதமுள்ள பகுதியையும் மாநகராட்சியாக மாற்றப் போறதாக வெளியான அறிவிப்பு எங்களுக்குப் பயத்தை ஏற்படுத்தி இருக்கு. எங்க ஊர் ஊராட்சியாக இருந்தால்தான் எங்களுக்குப் பல சலுகைகள் கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாக மழையில்லாமல் விவசாயம் இல்லை. இதனால் வேறு வழியில்லாமல் கூலி வேலைக்கும், கட்டட தொழிலாளர்களாகவும் போகும் நிலை உள்ளது. எங்களுக்கு வழங்கப்படும் 100 நாள் வேலைவாய்ப்பிலும் இந்த அதிகாரிங்க கை வைக்கிறாங்க. மாநகராட்சியோட இணைத்துவிட்டால் அந்த வேலை கிடைக்காது. அதேபோல, தண்ணி வரி, வீட்டுவரி என அதிகமாகும். வருமானமே இல்லாத நாங்கள், இந்த வரிகளை எப்படிக் கட்டுவோம். அதனால்தான் மாநகராட்சியோட இணைக்க வேண்டாம்னு சொல்றோம். எங்கள் கிராமங்களை மாநகராட்சியோடு இணைத்துவிட்டால் எங்களுக்கு வேலை கிடைக்காது. எங்களுடைய பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடாதிங்க என அதிகாரிகளிடம் மனு கொடுக்க வந்துள்ளோம்” என்றனர்.

இதுகுறித்து விரைவில் முடிவை அறிவிப்போம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறியதை அடுத்து கூட்டம் கலைந்து சென்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க