Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குர்மித் ராம் ரஹீம் சிங் தீர்ப்பு... மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவோமா? #WhyInGodsName

குர்மித் ராம் ரஹீம் சிங்

ட மாநிலங்களில் பலத்த கலவரம். ஏன்? எதற்கு என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.

யார் இந்த குர்மித் ராம் ரஹீம் சிங்

ராஜஸ்தான் மாநிலம், கன்கர் மாவட்டத்தில் உள்ள குருசர் மோடியா எனும் கிராமத்தில் பிறந்தவர் குர்மித் ராம் ரஹீம் சிங். சிறுவயது முதலே ஆன்மிகத்தில் அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆர்வம்தான் 23 வயதிலேயே ஒரு அமைப்புக்கும் அவரைத் தலைவராக உயர்த்தியது.

சமூக சேவைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர் கின்னஸ் சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்து அதிர வைத்திருக்கிறார். 2015’ல் வெளியான 'மெஸஞ்சர் ஆஃப் காட்' திரைப்படத்தின் ஹீரோவாக இந்தியாவையே கதற வைத்திருந்தார். அப்படத்தின் இயக்குநர்களில் அவரும் ஒருவர்! நம்மூரு டி.ஆர் மாதிரி கதை, திரைக்கதை, பாடல், வசனம், இயக்கம் என அவர் பெயர் மட்டுமே நீண்ண்ண்ண்டு கொண்டிருக்கும்.

அவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

தேரா சச்சா சவுதா

1948 ஆம் ஆண்டு ‘மஸ்தானா பலோசிஸ்தானா’ என்பவரால் தொடங்கப்பட்ட அமைப்புதான் 'தேரா சச்சா சவுதா'. உலகம் முழுவதும் 46 ஆசிரமங்கள் உள்ளன. மஸ்தானா பலோசிஸ்தானாவுக்குப் பிறகு ‘ஷா சத்னம் சிங்’ இவ்வமைப்பின் தலைவரானார். அந்நேரத்தில் ராம் ரஹீம் அவ்வமைப்பின் தன்னார்வலராக இருந்தார். ரஹீமின் சேவையையும், பணியையும் கண்டு வியந்துபோன  சத்னம் சிங், அவரையே தனது வாரிசாகவும் அறிவித்தார். தனது 23 ஆம் வயதில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரானார் குர்மித் ராம் ரஹீம் சிங்!

சர்ச்சைகள்

ஆசிரமப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதான சர்ச்சை. இதனை அம்பலப்படுத்த முயன்ற பத்திரிகையாளர் ‘ராம் சந்தர் சத்ரபதி’ என்பவரின் கொலை சம்பவத்தில் சிக்கியதாக சர்ச்சை. ஆசிரமப் பணியாளர் ‘ரஞ்சித் சிங்’ கொலை வழக்கிலும் இவரது பெயர் அடிபட்டது.

2007’ல் சீக்கிய மதகுரு தலைவர் ‘குரு கோவிந்த் சிங்’ போல தன்னை உருவகப் படுத்திக்கொண்டார். ஒருகட்டத்தில் தன்னை கடவுளாகவே முன்னிறுத்தத் தொடங்கினார்.

- இதுபோன்ற சர்ச்சைகளுக்கிடையே பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் கொலை வழக்கு என இரண்டு வழக்குகள் அவர் மீது பாய்ந்தன.

2002’ல் தேரா சச்சா சவுதா ஆசிரமத்திலிருந்து ஒரு மொட்டைக் கடிதாசி அன்றையப் பிரதம மந்திரி வாஜ்பாய்க்கு பறந்தது. அதில், 'குர்மித் ராம் ரஹீம் சிங்ன் பாலியல் தொல்லை' பற்றி பகீரங்க குற்றச்சாட்டு எழுதப்பட்டிருந்தது. விசாரணை ஆரம்பம் ஆனது.

செப்டம்பர் 2002’ல் வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. டிசம்பர் 2002-ல் ரஹீம் மீது வழக்குப் பதிவு செய்தது சி.பி.ஐ. ஐந்து ஆண்டுகள் கழித்து 2007-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 1999 முதல் 2001 வரை குர்மித் ராம் ரஹீம் சிங் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது.

2009 மற்றும் 2010-ல் இரண்டு பெண்களும் வாக்குமூலம் அளித்தனர். அதுவரையிலும் அம்பாலா நகரில் நடைபெற்று வந்த விசாரணை நீதிமன்றம் பஞ்ச்குலாவுக்கு மாற்றப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் முதல் தினமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி வழக்கின் மீதான விவாதம் முடிவடைந்து தீர்ப்பு நாளாக 25-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பஞ்ச்குலா நகரில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. குர்மித் ராம் ரஹீம் சிங் குற்றவாளி…!

கலவரம்

கலவரம் வெடித்தது. ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. பேருந்துகள் கொளுத்தப்பட்டன. கலவரத்தால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதைத்தான் குர்மித் ராம் ரஹீம் சிங் இத்தனை ஆண்டுகளாக தனது லட்சக்கணக்கான சீடர்களுக்கு சொல்லிக்கொடுத்தார் போலும். 

அவர் பாதுகாப்பாக இருக்கிறார். ‘ரோதக்’ நகர் சிறைக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றுள்ளனர் காவலர்கள்.

மொட்டைத்தலையும், முழங்காலும்!

இப்போது மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு பார்ப்போம்.  ராஜஸ்தானின் அண்டை மாநிலம் உத்திரப்பிரதேசம். கொத்துக் கொத்தாக குழந்தைகள் இறந்துபோன மருத்துவமனையைக் கொண்ட கோரக்பூர் உத்திரபிரதேச மாநிலத்தில்தான் உள்ளது. உத்திரபிரதேசத்தின் ஆளுங்கட்சி பி.ஜே.பி. மோடிக்குப் பிறகு பி.ஜே.பி’யின் அடுத்தத் தேசிய அடையாளமாக  யோகி ஆதித்யநாத் முன்னிறுத்தப்படுவார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். யோகி ஆதித்யநாத்தான் தற்போதைய உத்திரப்பிரதேசத்தின் முதல் மந்திரி.

கோரக்பூர் மருத்துவமனையில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து இறந்துபோனது எப்படி என்ற கேள்விக்கான சரியான விடை இன்றளவிலும் தெரியவில்லை.

நிலைமை இப்படியிருக்க ராம் ரஹீம் சிங் பற்றிதான் நாடு முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறோம். தற்போது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இந்த சாமியாருக்கு வெவ்வேறு வழக்குகளில் தலா பத்தாண்டுகள் சிறைதண்டனை விதித்தும் 65,000 ரூபாய் நீதிமன்ற அபராதம் செலுத்தச் சொல்லியும் தீர்ப்பளித்துள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு சாமியாருக்காக, குழந்தைகளை மறந்து வன்முறையில் இறங்கியுள்ளது வட மாநிலங்கள்! 

இதைத்தான் அரசும் விரும்புகிறதா? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட எண்ணி வெற்றியும் பெற்றுவிட்டதோ…?

 

-ராஜாராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement