கன்னையாகுமார் மீது தாக்குதல்: ஜனநாயக சக்திகளுக்கு முத்தரசன் அழைப்பு

கன்னையா குமார்

'பா.ஜ.க அரசின் தோல்விகள்' என மத்திய அரசுக்கு எதிராகப் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வரும் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் கன்னையா குமார் மீதும் அவரின் தோழர்கள் மீதும் ஜார்க்கண்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய இளைஞர் பெருமன்றமும் மாணவர் பெருமன்றமும் இணைந்து ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு மாதமாக நாடு முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகின்றன. நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொர்டர்மா (korderma) என்ற இடத்தில் பிரசார இயக்கத்தில் பங்கேற்றவர்கள் மீதும் கன்னையா குமார் மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட இந்தக் குழு நாடு முழுவதும் பா.ஜ.க ஆட்சியின் தோல்விகளை விளக்கி வெற்றிகரமாக பொதுமக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., சங்க பரிவாரம் இதனால் அம்பலப்பட்டு வருகிறது. இயல்பாகவே அவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே பிரசாரக் குழுவினர் மீது, குறிப்பாக கன்னையா குமார் மீது தாக்குதலை நடத்தத் தொடங்கி உள்ளனர்” என்று கூறியுள்ளார். 

”நீண்ட பயணத்தை நடத்தி வருகிற இப்பிரசாரக் குழுவினரை மூன்றாவது முறையாகத் தாக்கியுள்ளனர். மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளத்தை அடுத்து இப்போது ஜார்க்கண்டில் முக்கிய முன்னணி ஊழியர்கள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்தி உள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ள அவர்,  

”மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இணைந்து இந்த தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்; பிரசாரக் குழுவினருக்கு தங்கள் ஆதரவைத் தர வேண்டும்” என்றும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!