வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (28/08/2017)

கடைசி தொடர்பு:21:55 (28/08/2017)

’வியாபம் ஊழலை மிஞ்சும் முறைகேடு!’- எச்சரிக்கும் ஸ்டாலின்

தமிழக மருத்துவ கலந்தாய்வில் இரட்டை இருப்பிடச் சான்றிதழ்கள் மூலம் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரட்டை இருப்பிடச் சான்றிதழ்கள் மூலம் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவக் கல்லூரி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ‘இருப்பிடச் சான்றிதழ்கள்’ வழங்குவது பற்றி தெளிவான வழி காட்டுதல்கள் உள்ளன. குறிப்பாக, தமிழ் மொழிப் பேசாத மாணவர்களுக்கு ‘இருப்பிடச் சான்றிதழ்’ வழங்கும்போது, அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அட்மிஷன் வழிகாட்டுதல்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்படியிருந்தும், எப்படி “இரட்டை இருப்பிடச் சான்றிதழ்கள்” பெறப்பட்டன? தாசில்தார்களை மிரட்டி, இதுபோன்ற சான்றிதழ்களைக் கொடுக்க வைத்தது யார்? என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தச் சான்றிதழின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான மெரிட் லிஸ்டை வெளியிட்டபோது, அந்தத் தகுதிப் பட்டியலைத் தயாரிக்கும் தேர்வு கமிட்டியின் உறுப்பினர்களும், செயலாளரும் ஏன் போதிய கவனம் செலுத்தவில்லை?. ‘இரட்டை இருப்பிடச் சான்றிதழ்’ அளித்த வெளிமாநில மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பட்டியலைத் தேர்வு கமிட்டி ஏன் கண்ணை மூடிக்கொண்டு தயாரித்தது?. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு நிர்வாக ஒதுக்கீட்டில் மட்டும் 900-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘இரட்டை இருப்பிட சான்றிதழுடன்’ எப்படித் தேர்வுசெய்யப்பட்டார்கள்?. இதுபோன்றச் சான்றிதழ்களை வைத்து தேர்வுசெய்ய தேர்வுக் கமிட்டிக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
போலி ‘இரட்டை இருப்பிடச் சான்றிதழ்’ வழங்கினால், அந்த மாணவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ இடம் ரத்துசெய்யப்பட்டு, மாணவர் மீதும் அவரது பெற்றோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி சேர்க்கை (PROSPECTUS) விதி 3(h)-ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் சேருவதற்கு ஒரு கோடி ரூபாய் வரை விலை போகிறது என்ற நிலையில், அரசுக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரும் மாணவருக்கு வருடாந்திர கட்டணம் ரூ.13,600 என்றும், பி.டி.எஸ் மாணவருக்கு கட்டணம் ரூ.11,600 என்றும் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுவதற்கு வசதியாக இப்படி போலி ‘இரட்டை இருப்பிடச் சான்றிதழ்’ கொடுத்தவர்கள் தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்களோ என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

ஒரு மெடிக்கல் சீட் வெளியில் ஒரு கோடி ரூபாய் என்று எடுத்துக்கொண்டால், இப்படி இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் “தகுதி பட்டியலில்” இடம்பெற்றுள்ளவர்கள் மூலம் நடைபெற்றுள்ள ஊழல், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற “வியாபம்” ஊழலை விட மோசமானதாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஆகவே, ‘இரட்டை இருப்பிடச் சான்றிதழ்’ மூலம் மருத்துவக் கல்லூரிகளுக்கான “தகுதி பட்டியலில்” இடம்பெற்றுள்ளவர்கள் பற்றி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏதோ ஒன்று, இரண்டு பேர் இப்படிக் கொடுத்து விட்டார்கள் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுப்பதால் இந்த முறைகேடுகளின் மொத்த உருவமும் வெளிச்சத்துக்கு வராது. ஆகவே “இரட்டை இருப்பிட சான்றிதழ்” வழங்கக் காரணமாக இருந்தோர், தகுதிப் பட்டியலை வெளியிட்ட தேர்வுக் கமிட்டியில் இடம்பெற்றோர், தேர்வுக் கமிட்டிக்கு நிர்பந்தம் கொடுத்தோர் உள்ளிட்ட அனைவர் மீதும் தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியதிருப்பதாலும், ‘இரட்டை இருப்பிடச் சான்றிதழ்’ என்பது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரமாக இருப்பதாலும், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீடுகளில் சேருவதற்கு 22.8.2017 அன்று வெளியான “தகுதிப் பட்டியல்” குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பில் இருக்கும் மாண்புமிகு பொறுப்பு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என்று ஸ்டாலின், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.