வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (29/08/2017)

கடைசி தொடர்பு:12:39 (29/08/2017)

கூடங்குளம் அணுஉலையில் 4 மாதங்களுக்குப் பின் மீண்டும் மின் உற்பத்தி!

கூடங்குளம் முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து, 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 

அணு உலை

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட இரு அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. இரு அணுஉலைகளிலும் வணிகரீதியிலான மின் உற்பத்தி தொடங்கிய நிலையில், அவை அடிக்கடி பழுது ஏற்பட்டு நிறுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக, இந்த இரு அணுஉலைகளையும் அணுசக்திக்கு எதிரான அமைப்பினர் கடுமையாகக் குற்றம் சாட்டிவருகின்றனர். 

கூடங்குளம் முதலாவது அணுஉலை, கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி, வணிகரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்கியது. இந்த அணுஉலையில், எரிபொருள் நிரப்புவதற்காகக் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி அதிகாலை 5.53 மணிக்கு அதன் இயக்கம் நிறுத்தப்பட்டது. அணுஉலை இயக்கத்திற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆக்ஸைடு எரிபொருளாகத் தேவைப்படுவதால், அதை நிரப்பும் பணி   எந்திரங்களின் மூலமாக நடத்தப்பட்டது. எரிபொருள் நிரப்பப்பட்டால், 7000 மணி நேரத்துக்கு அணுஉலை இயங்க முடியும். அதனால், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை அகற்றிவிட்டு, புதிய எரிபொருள் நிரப்பும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. 

அணு உலை

இந்தப் பணிகள், 60 நாள்களில் முடிவடையும் என அணுஉலை நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறித்த காலத்தை விடவும் மிகவும் தாமதம் ஏற்பட்டது. சுமார் 4 மாத காலத்தையும் தாண்டிய நிலையில், முதலாவது அணு உலை இயக்கப்படாதது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அணுஉலையில் கடந்த 24-ம் தேதி அணுப்பிளவு நடைபெறத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இன்று காலை 6.37 மணிக்கு அணுஉலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரம், மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டுவிட்டதாகவும், கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.