'நீட் தேர்வால் பாதிப்பு என்று பொய் பரப்புரை..!' - தமிழிசை குற்றச்சாட்டு | Tamilisai statement abot Tamilnadu medical counselling

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (29/08/2017)

கடைசி தொடர்பு:11:26 (29/08/2017)

'நீட் தேர்வால் பாதிப்பு என்று பொய் பரப்புரை..!' - தமிழிசை குற்றச்சாட்டு

''தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் மருத்துவ மாணவர் கலந்தாய்வில் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் நடக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில், எந்த முறைகேடும் நடக்காமல் கண்காணிக்கவேண்டியதும் தமிழக அரசின் கடமை''  என்று டாக்டர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.


தமிழிசை

 


தமிழக பி.ஜே.பி மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நீட் தேர்வின் அடிப்படையில் நடக்கும் மருத்துவ மாணவர்கள் ஒதுக்கீட்டில், கணிசமான இடங்கள் ஸ்டேட் போர்டில் படித்த மாணவர்களுக்கே கிடைத்துவருகிறது. நீட் தேர்வால், தமிழக மாணவர்கள் பாதிப்பு எனப் பொய்யுரை பரப்பிய அரசியல்வாதிகள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது வெளிச்சமாகி இருக்கிறது. இதுவரை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அரசுப் பள்ளி மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், ஆண்டுக்கு 25-30 பேர் மட்டுமே மருத்துவப் படிப்புக்குத் தேர்வாகி வந்துள்ளார்கள். ஆனால், இந்த ஆண்டு சுமார் 2,000 பேருக்கு மேல் நீட் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிற்சிபெற்று மருத்துவப் படிப்பில் சேர்வார்கள். இங்கே, தமிழக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அவரவர் அரசியல் நலனுக்கு நாடகம் ஆடுகிறார்கள்.  மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள், அகில இந்திய அளவில் போட்டி போட முடியாமல் நிரந்தர விலக்கு தாருங்கள் எனக் கேட்கும் இந்த நிலைக்கு யார் காரணம்?


இதன் ஊடே நடந்துகொண்டிருக்கும் மருத்துவ மாணவர் கலந்தாய்வில் கூறப்படும் முறைகேடுகள், குறிப்பாக மாணவர்களின் பெற்றோர் குடியுரிமை மாறாட்டம் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை விசாரித்து, தவறான தகவல் தந்த மாணவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். முறைகேடாக இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கிய அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். சில மாணவர்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பலர் இருக்க வாய்ப்புண்டு என்பதால் தீவிர விசாரணை தேவை. பிற மாநிலப் பட்டியலிலும் தமிழகத்திலும் ஒரே நேரத்தில் இடம் பெற்றுள்ள பலரது பதிவு எண்கள்குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்.


மருத்துவக் கலந்தாய்வில், தமிழகத்தில் 8 இலக்க நீட் பதிவு வரிசை எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் 9 இலக்க நீட் பதிவு எண்கள் மூலம் தர வரிசை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். நீட் தேர்வில் தரமான மாணவர்கள் திறமை அடிப்படையில் தேர்வாகும் சூழல் தமிழகத்தில் நிர்வாக முறைகேடுகளால் பாதிக்கப்படக்கூடாது. தமிழ்நாட்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைகழகங்களிலும் நடக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில், எந்த முறைகேடுகளும் நடக்காமல் கண்காணிக்க வேண்டியதும் தமிழக அரசின் கடமை'' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க