வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (29/08/2017)

கடைசி தொடர்பு:11:15 (29/08/2017)

சொத்து ஆவணங்களை மீட்பாரா? குமரி பச்சைமால்

கடந்த சட்டமன்றத் தேர்தலில், குமரியில் உள்ள ஆறு தொகுதிகளிலும் அ.தி.மு.க தோற்றது. அதன் எதிரொலியாக, கடந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி, தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ராஜ்யசபா எம்.பி-யாக அறிவிக்கப்பட்ட விஜயகுமாரை கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக ஜெயலலிதா அறிவித்தார்.

ஏற்கெனவே தளவாய்சுந்தரம், பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எனக் குமரி அ.தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் இப்போது ஒதுங்கிவிட்டனர். விஜயகுமாரைச் சுற்றி புது அணி உருவானது. சில வாரங்களில் ஒரு சிலரைத் தவிர ஒட்டுமொத்தமாக கிளை முதல் மாவட்டம் வரை அனைத்து நிர்வாகிகளும் மாற்றப்பட்டனர். குமரி மாவட்டத்தில், ஆக்டிவாக இருந்த பல அ.தி.மு.க-வினருக்குப் பதவி பறிக்கப்பட்டதோடு, டம்மியாக்கப்பட்டதால் அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டனர் .

ஜெயலலிதா மறைவுக்குப் பின், குமரி அ.தி.மு.க பல பிரிவுகளாக சிதறிப்போனது. முன்னாள் அமைச்சர்கள் பச்சைமாலும் தளவாய் சுந்தரமும் மாவட்டச் செயலாளர்களாக இருந்தபோது பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த குமரிமாவட்ட அ.தி.மு.க., சோர்வடைந்தது. கழக அமைப்புச் செயலாளராகவும், டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகவும் இருக்கும் தளவாய்சுந்தரம், சென்னையில் செட்டிலாகிவிட்டார். டி.டி.வி. தினகரன் மூலம் முன்னாள் அமைச்சரான பச்சைமாலுக்குக் கழக அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. குமரியின் நீண்டகால அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த பச்சைமால், மறுபடியும் ஆக்டிவாக செயல்படுவார் என்று நினைத்தபோது, அவரும் சற்று ஒதுங்கியிருந்தார். பெரும்பாலான அ.தி.மு.க-வினர், எந்தப் பக்கம் போவது எனக் குழப்பத்தில் இருந்ததால், மாவட்டச் செயலாளர் விஜயகுமார் எம்.பி அணி, கலக்கத்திலிருந்து வந்தது. டி.டி.வி. தினகரன் ஆதரவில் பச்சைமால் மாவட்டச் செயலாளர் ஆகும் முயற்சியில் இறங்கிவந்தார். தற்போது, மாவட்டச் செயலாளராக பச்சைமால் நியமிக்கப்பட்டு, விஜயகுமார் எம்.பி., நீக்கப்பட்டுள்ளார்.

இவரும் தினகரனின் ஆதரவாளராக இருந்து எம்.பி மற்றும் மாவட்டச் செயலாளர் ஆனவர்கள்தாம். பச்சைமால் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளராக இருக்க, அ.தி.மு.க-வினர் சொன்ன காரணம்தான் அதிர்ச்சியாக இருக்கிறது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதிக்குப் பணம் பட்டுவாடா செய்ய, சில கோடிகளை அ.தி.மு.க. தலைமை அனுப்பி இருந்ததாம். அதில் சில லட்சங்களை மட்டும் செலவு செய்துவிட்டு, மீதியை அப்போது மாவட்டச் செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்த பச்சைமால் பதுக்கிவிட்டார். அதன் பின், பச்சைமாலின் வீட்டில் நடந்த ரெய்டில் பல சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாம். பின்னர், அனைத்துப் பொறுப்பிலிருந்தும் பச்சைமால் நீக்கப்பட்டார்.

அந்தச் சொத்து ஆவணங்கள், சசிகலா வசம் இருப்பதாக பச்சைமாலுக்குத் தகவல் வர, தன்னை சசிகலாவின் தீவிர ஆதரவாளராகக் காட்டிக் கொண்டார். தற்போது, டி.டி.வி. தினகரன் ஆதரவாளராக வலம் வருகிறார். டி.டி.வி. தினகரன் நடத்திய மதுரை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கூட்டத்துக்கு யாரையும் அழைத்துச்செல்லாமல், தனியாக பச்சைமால் சென்று வந்தார். இப்போது, டி.டி.வி. தினகரனால் மாவட்டச் செயலாளர் ஆக்கப்பட்டதன்மூலம் தனது சொத்து ஆவணங்களைத் திரும்பப் பெற்றுவிடும் முயற்சியில் பச்சைமால் இருக்கிறார் என்று குமரி அ.தி.மு.க-வினர் சொல்கிறார்கள். குமரிமாவட்ட அ.தி.மு.க-வில் களேபரம் நடக்கவிருப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க